பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இரண்டாம் நாள் முடிவுகள்!

இந்தியா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் 22-வது இடத்தில் உள்ளது.

யோகேஷ் குமார்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2-வது நாளில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

முதல் நாளில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காத நிலையில், 2-வது நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

மேலும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் மனு பாக்கர்.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான ஸ்ரீஜா மற்றும் மணிகா பத்ரா வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

மகளிர் குத்துச்சண்டை 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பாய்மர படகுப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வர், ரெபிசேஜ் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றபடி 2-வது நாள் முடிவுகள் இந்தியாவுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய நட்சத்திரமான சரத் கமல் தோல்வியடைந்தார். ஐந்தாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற சரத் கமல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

அதேபோல் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா - பாலாஜி ஜோடி முதல் சுற்றுடன் வெளியேறினர்.

மகளிர் வில்வித்தை காலிறுதிச் சுற்றில் இந்திய அணி நெதர்லாந்திடம் 6-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

எனவே, 2-வது நாளில் இந்தியா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் 22-வது இடத்தில் உள்ளது.

ஜப்பான் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஒலிம்பிக்ஸ் 3-வது நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் இறுதிச் சுற்றில் மகளிர் பிரிவில் ரமிதாவும், ஆடவர் பிரிவில் அர்ஜுனும் விளையாடவுள்ளனர். இந்த ஆட்டம் முறையே மதியம் 1, 3.30 மணிக்கு தொடங்குகிறது.

அதேபோல், ஆடவர் வில்வித்தை காலிறுதிச் சுற்றில் இந்திய அணி இன்று விளையாடுகிறது.