ANI
விளையாட்டு

ஆலி போப் அபார சதம்: 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து முன்னிலை

ஆலி போப் 208 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கிழக்கு நியூஸ்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஹைதராபாதில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 11 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 436 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா 87 ரன்களுக்கும், அக்‌ஷர் படேல் 44 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த முறையும் கிராலே, டக்கெட் இணை நேர்மறையான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில், முதல் விக்கெட்டாக அஸ்வின சுழலில் ஆட்டமிழந்தார் கிராலே. இவர் 33 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

அரை சதத்தை நெருங்கிய டக்கெட்டையும், ஜோ ரூட்டையும் அடுத்தடுத்து ஓவர்களில் வீழ்த்தி திருப்புமுனை உண்டாக்கினார் பும்ரா. பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் ஆகிய அனுபவ பேட்டர்களும் சரணடைய ஆலி போப் மட்டும் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பென் ஃபோக்ஸ் நிதானமாக விளையாடி போப்புடன் இணைந்து கூட்டணி அமைத்தார். இந்தக் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது. ஃபோக்ஸை 34 ரன்களுக்கு போல்ட் செய்து அக்‌ஷர் படேல் கூட்டணியைப் பிரித்தார். இதனிடையே ஆலி போப்பும் 154 பந்துகளில் சதத்தை எட்டியிருந்தார்.

ஃபோக்ஸ் விக்கெட்டுக்குப் பிறகு ரெஹான் அஹமதுவை வைத்துக்கொண்டு வேகமாக ரன் குவித்தார் போப். மூன்றாம் நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட்டுகள் விழவில்லை.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்து 126 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஆலி போப் 208 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.