கோப்புப்படம் ANI
விளையாட்டு

சேப்பாக்கம் ஆடுகளத்தைக் கணிக்க முடியவில்லை: ஸ்டீஃபென் ஃபிளெமிங்

"சேப்பாக்கம் ஆடுகளம் சிஎஸ்கேவுக்கு சாதகமானதாக இல்லை. இது பழைய சேப்பாக்கம் கிடையாது."

கிழக்கு நியூஸ்

சேப்பாக்கம் ஆடுகளத்தைக் கணிக்க முடியவில்லை என்றும் இது பழைய சேப்பாக்கம் கிடையாது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபென் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025-ன் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஆர்பிசி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தன. இலக்கை விரட்டிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சென்னை சேப்பாக்கத்தில் 2008-க்கு பிறகு சிஎஸ்கேவுக்கு எதிராக ஆர்சிபி பெறும் முதல் வெற்றி இது. சிஎஸ்கேவின் தோல்விக்கு ரசிகர்கள் பல காரணங்களை முன்வைத்து விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மற்றும் சாம் கரன் போன்ற வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனக் குரல்கள் வலுக்கின்றன. சிலர், ஆர் அஸ்வினுக்குப் பிறகு எம்எஸ் தோனி களமிறங்குவதைக் கேள்வியெழுப்பி வருகிறார்கள். கடந்தாண்டு பிளே ஆஃப் வாய்ப்பைப் பறித்த ஆர்சிபியிடம் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபென் ஃபிளெமிங், சேப்பாக்கம் ஆடுகளத்தைக் கணிக்க முடியவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம். சேப்பாக்கம் ஆடுகளம் சிஎஸ்கேவுக்கு சாதகமானதாக இல்லை. சேப்பாக்கத்துக்கு வெளியே சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம். சேப்பாக்கம் ஆடுகளத்தை எங்களால் கணிக்க முடியவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கடந்த சில வருடங்களாகவே எங்களால் சேப்பாக்கம் ஆடுகளத்தைக் கணிக்க முடியவில்லை. இது புதிதல்ல.

பழைய சேப்பாக்கத்தில் எந்த யோசனையும் இல்லாமல் 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம். ஆனால், இது பழைய சேப்பாக்கம் கிடையாது. ஒவ்வொரு ஆடுகளத்தின் தன்மையையும் புரிந்துகொள்ள கடுமையாக முயற்சிக்கிறோம். ஆனால், ஒவ்வொன்றும் வேறாக உள்ளன" என்றார் ஃபிளெமிங்.

ஐபிஎல் 2024-ல் சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவவில்லை. சுழற்பந்துவீச்சு தான் சிஎஸ்கேவின் பலமாக இருந்துள்ளது. கடந்த ஐபிஎல் பருவத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 25. வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 74. இந்தத் தரவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஆர்சிபிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு கேகேஆர் அணியும் ஏறத்தாழ இதே கருத்தை முன்வைத்தது. கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே கூறுகையில், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவும் ஆடுகளத்தைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் ஆடுகளப் பராமளிப்பாளர் சுஜன் முகெர்ஜி, தான் உள்ள வரை ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் மாற்றப்படாது என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக அவர்கள் விளக்கமும் கொடுத்தார்.

"முதல் ஆட்டத்துக்கு (கேகேஆர் vs ஆர்சிபி) ஆடுகளம் குறித்து வீரர் அல்லது அதிகாரிகள் யாரும் என்னை அணுகவில்லை. பயிற்சியின்போது ஆடுகளத்தின் தன்மை குறித்து பயிற்சியாளர் ஒருவர் என்னிடம் கேட்டார். ஆடுகளத்தில் பந்து திரும்பும், பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும் என்று பதிலளித்தேன்.

கேகேஆர் கேட்ட ஆடுகளத்தை நான் ஒருபோதும் மறுத்ததில்லை. நாங்கள் நீண்டகாலமாக நல்ல உறவுடன் இருக்கிறோம். பிசிசிஐ வழிகாட்டுதல்களின்படி ஆடுகளத்தைத் தயாரித்துள்ளேன். என்னைக் குற்றம்சாட்டுபவர்களுக்கு ஒன்றும் தெரியாது" என்றார் அவர்.