விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதிஷ் ரெட்டி விலகல்: பிசிசிஐ | Ind v Eng

4-வது டெஸ்டிலிருந்து அர்ஷ்தீப் சிங் விலகல்; அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்டிலிருந்து அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் மூன்று டெஸ்டுகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் வரும் 23 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி இரு டெஸ்டுகளிலிருந்து விலகியுள்ளார். இவர் இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மான்செஸ்டர் டெஸ்டிலிருந்து விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். பந்துவீச்சுப் பயிற்சியின்போது இவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இவருடைய உடல்நிலை முன்னேற்றம் குறித்து பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மான்செஸ்டரில் இந்திய அணியுடன் இணைந்துவிட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

நிதிஷ் குமார் ரெட்டி விலகியுள்ளதால், நான்காவது டெஸ்டில் ஆல்-ரவுண்டருடன் விளையாட வேண்டும் என இந்திய அணி நினைத்தால் முதல் டெஸ்டில் விளையாடிய ஷார்துல் தாக்குரை மீண்டும் களமிறக்கலாம். பந்துவீச்சு சுமையைக் கருத்தில் கொண்டு மூன்று டெஸ்டுகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா நான்காவது டெஸ்டில் விளையாடுவாரா என்பது உறுதிபடத் தெரியவில்லை.

ஏற்கெனவே, காயம் காரணமாக ஆகாஷ் தீப் நான்காவது டெஸ்டிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், பிசிசிஐ வெளியிட்ட இன்றைய அதிகாரபூர்வ அறிவிப்பில் ஆகாஷ் தீப் பற்றி குறிப்பு இல்லை. ரிஷப் பந்த் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முழு நேர பேட்டராக மட்டும் களமிறங்குவாரா அல்லது விக்கெட் கீப்பராக செயல்படுவாரா என்ற கேள்விக்கும் இந்தக் குறிப்பில் பதில் இல்லை.

Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Anshul Kamboj | Arshdeep Singh | Nitish Kumar Reddy | India Tour of England | India England Test Series | BCCI