நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்காக 2011-ல் அறிமுகமானார் டக் பிரேஸ்வெல். அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அடியெடுத்து வைத்தார். இவர் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்.
28 டெஸ்டுகளில் 38.82 சராசரியில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 21 ஒருநாள் ஆட்டங்களில் 32.5 சராசரியில் 26 விக்கெட்டுகளையும் 20 சர்வதேச டி20-களில் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரேயொரு அரை சதம் அடித்துள்ளார்.
கடைசியாக 2023-ல் நியூசிலாந்துக்காக விளையாடினார் பிரேஸ்வெல். 2011-ல் ஹோபார்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றி நியூசிலாந்துக்கு மறக்க முடியாதது. காரணம், 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து பெற்ற முதல் வெற்றி அது. இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டவர் தான் பிரேஸ்வெல். இந்த டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து இன்னும் ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 422 விக்கெட்டுகளை வீழ்த்தி 4,505 ரன்கள் எடுத்துள்ளார் டக் பிரேஸ்வெல்.
ஐபிஎல் 2012-ல் தில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இவர் விளையாடிருந்தார். ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிஎல்டி20 போட்டியில் மொத்தம் 3 ஆட்டங்களிலும் எஸ்ஏ20 போட்டியில் மொத்தம் 4 ஆட்டங்களிலும் மட்டுமே இவர் விளையாடியிருக்கிறார்.
காயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். இதுவே டக் பிரேஸ்வெலின் (35) ஓய்வு முடிவுக்கு உந்துதலாக இருந்துள்ளது.
New Zealand | Doug Bracewell |