லமிச்சானே 
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: விசா சர்ச்சையால் லமிச்சானே விலகல்

யோகேஷ் குமார்

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சானேவிற்கு காத்மண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. இதனால் அவர் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 2 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

முன்னதாக, கடந்த 2022-ல் காத்மண்டுவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 18 வயதுப் பெண்ணை லமிச்சானே பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து லமிச்சானே மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் லமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில், சந்தீப் லமிச்சானேவை அந்நாட்டு உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால் அவர் இனி வழக்கம்போல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான நேபாள அணியில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேபாள அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து லமிச்சானேக்கு விசா வழங்க நேபாளத்துக்கான அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்தது. முன்னதாக 2019 சிபிஎல் போட்டியில் பங்கேற்க விசா கோரி லமிச்சானே சென்ற போதும், அவருக்கு விசா வழங்க நேபாளத்துக்கான அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காத்மாண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா நேர்காணலில் லமிச்சானே கலந்து கொண்டார். டி20 உலகக் கோப்பைக்காக அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெறுவதற்கு உதவும் வகையில், விளையாட்டு அமைச்சகத்தின் வேண்டுகோளின் பேரில் அவரது விசா நேர்காணல் இன்று திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் லமிச்சானேக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது. இதனால் அவர் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.