ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் மனைவி ஹிமானி மோர், ரூ. 1.5 கோடி மதிப்புடைய வேலையைத் துறந்து தொழிலில் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கடந்த ஜனவரியில் ஹிமானி மோர் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஹிமானி மோர் டென்னிஸில் ஆர்வம் கொண்டவர். டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள ஹிமானி, தற்போது பயிற்சிகளை அளித்து வருவதாகத் திருமணத்தின்போதே தகவல்கள் வெளியாகின.
தொழில்முறை டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2018-ல் தரவரிசையில் 42-வது இடத்தைப் பிடித்தார். இரட்டையர் பிரிவில் அதிகபட்சமாக தரவரிசையில் 27-வது இடம் வரை சென்றுள்ளார்.
ஹிமானி மோர் தற்போது டென்னிஸிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் விளையாட்டு சார்ந்த தொழில்களில் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஹிமானியின் தந்தை சந்த் மோர், டைனிக் பாஸ்கருக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவில் ரூ. 1.5 கோடி மதிப்புடைய விளையாட்டு சார்ந்த வேலையை ஹிமானி மோர் துறந்துள்ளதாகக் கூறினார். விளையாட்டு சார்ந்த தொழிலில் ஹிமானி கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
நீரஜ் சோப்ரா தற்போது ஐரோப்பாவில் உள்ளார். ஹிமானியும் அவருடன் தான் உள்ளார். நீரஜ் சோப்ராவின் உணவுக் கட்டுப்பாடு மற்றும் பயிற்சியைக் கவனித்துக் கொண்டு வருகிறார்.
Neeraj Chopra | Himani Mor |