நீரஜ் சோப்ரா ANI
விளையாட்டு

நம் தேசத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பேன்: 2028 ஒலிம்பிக்ஸ் குறித்து நீரஜ் சோப்ரா!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலின் இறுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

யோகேஷ் குமார்

இம்முறை நம் தேசிய கீதம் ஒலிக்காமல் இருக்கலாம், ஆனால் வருங்காலத்தில் நிச்சயம் ஒலிக்கும் என்று நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இம்முறையும் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இறுதிச் சுற்று முடிந்தவுடன் பேட்டியளித்த நீரஜ் சோப்ரா, “இன்னும் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்றார்.

நீரஜ் சோப்ரா பேசியதாவது:

“வெள்ளிப் பதக்கத்தைப் பற்றி கவலை இல்லை, ஆனால் நான் எறிந்த தூரம் தான். நான் இன்னும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எனது வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். 2028 ஒலிம்பிக்ஸுக்கு முன்னதாக நிறைய போட்டிகள் உள்ளது, அதற்குள் நான் எறியும் தூரத்தை அதிகரித்து நம் தேசத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பேன். இம்முறை நம் தேசிய கீதம் ஒலிக்காமல் இருக்கலாம், ஆனால் வருங்காலத்தில் நிச்சயம் ஒலிக்கும். எப்போதெல்லாம் எனது கையில் நம் தேசிய கொடி உள்ளதோ, அப்போதெல்லாம் பெருமையாக உணர்வேன்” என்றார்.