நடராஜன் 
விளையாட்டு

ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று நடராஜன் பேசினாரா?

"முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற போது மிகவும் பதற்றமாக இருந்தது".

யோகேஷ் குமார்

தமிழ் தவிர தனக்கு எந்த மொழியும் தெரியாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என இந்திய வீரர் நடராஜன் பேசியுள்ளார்.

சேலத்தில் தான் படித்த ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட நடராஜன் மாணவர்களிடம் கலந்துரையாடினார். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், தன்னுடைய கிரிக்கெட் அனுபவம் உட்பட பல விஷயங்களை அங்கு பேசியுள்ளார்.

நடராஜன் பேசியதாவது:

“எனக்கு பேச்சுக்கூட வராது. எனக்கு தமிழ் தவிர எதுவும் தெரியாது. அங்கு முழுவதும் ஹிந்தி மட்டும் தான். இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் அங்கு இருந்தார். அவருக்கு தமிழ் தெரியும். எதுவாக இருந்தாலும், அவர்தான் எனக்கு கம்யுனிக்கேட் செய்வார். ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால், இதற்காக நான் கஷ்டப்பட்டு பின் தங்கினால் சரியாக இருக்காது. ரொம்ப கஷ்டப்பட்டேன். தனியாக இருப்பது போல் உணர்ந்தேன். நல்ல குணங்கள் இருந்தால் யாராவது உதவி செய்வார்கள் என்று சொல்வதற்கு ஏற்ப ஸ்ரீதர் இருந்தார். சேவாக்கும் எனக்கு உதவியாக இருந்தார்.

2018-ல் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்தவுடன் அதிகமாக பேச ஆரம்பித்தேன். நீங்கள் யாரும் இதுபோன்று கஷ்டப்படக் கூடாது என்பதால் தான் நான் செல்லும் பள்ளி, கல்லூரிகளில் இது குறித்து பேசுகிறேன். எனவே, சரியோ தவறோ இப்போது இருந்தே நம்பிக்கையாக பேசுங்கள், பின்னால் அது சுலபமாக இருக்கும்” என்றார்.

இதைத் தொடர்ந்து நடராஜன் ஹிந்தி கற்றுக் கொள்ளுமாறு மாணவர்களிடம் பேசியதாகக் கூறி சர்ச்சை எழுந்தது. ஆனால், கம்யுனிகேஷனை வளர்த்து கொண்டால் பிற்காலத்தில் எங்கு சென்றாலும் அது உதவும் என்ற நோக்கத்திலேயே அவர் பேசியுள்ளார்.