மும்பை வீரர்களுக்கு 100% ஊதிய உயர்வு ANI
விளையாட்டு

ரஞ்சி கோப்பை: மும்பை வீரர்களுக்கு 100% ஊதிய உயர்வு

42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது மும்பை அணி.

யோகேஷ் குமார்

2024-25 ரஞ்சி கோப்பையில் மும்பை வீரர்களுக்கு 100 சதவீத ஊதிய உயர்வை வழங்க மும்பை கிரிக்கெட் சங்கத்தின் உயர்நிலை குழு ஒப்புக்கொண்டுள்ளது.

சமீபத்தில் விதர்பா அணியை வீழ்த்தி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது மும்பை அணி.

இந்நிலையில் தங்கள் அணியின் வீரர்களுக்கு பிசிசிஐ கொடுக்கும் சம்பளத்துடன் சேர்த்து, கூடுதலாக சம்பளம் (பிசிசிஐ வழங்கும் அதே சம்பளத்தை) அளிக்க வேண்டும் என மும்பை கிரிக்கெட் சங்கம் தங்களின் உயர்நிலை குழுவிடம் கோரிக்கை வைத்தது. இதைத் தொடர்ந்து அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தற்போது ரஞ்சி கோப்பை வீரர்களுக்கு மூன்று விதமாக ஊதியம் வழங்குகிறது.

40- க்கும் அதிகமான முதல்தர ஆட்டத்தில் விளையாடிய வீரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ. 60,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.

21-40 முதல்தர ஆட்டத்தில் விளையாடிய வீரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ. 50,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.

மேலும் 20- க்கும் குறைவான முதல்தர ஆட்டத்தில் விளையாடிய வீரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ. 40,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இனி மும்பை வீரர்களுக்கு 100 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.