ANI
விளையாட்டு

எம்எஸ் தோனி தாமதமாகக் களமிறங்குவது ஏன்?: ஃபிளெமிங் விளக்கம்

"எம்எஸ் தோனியின் உடல், முழங்கால் பழைய மாதிரி இல்லை. அவருடைய முழங்காலில் சற்று தேய்மானம் உள்ளது."

கிழக்கு நியூஸ்

எம்எஸ் தோனிக்கு முழங்காலில் பிரச்னை இருப்பதால், அவரால் 10 ஓவர்கள் முழுமையாக பேட் செய்ய முடியாது என சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது. குவஹாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே நேற்று மீண்டும் தோல்வியடைந்தது. முதல் 3 ஆட்டங்களில் 1 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது சிஎஸ்கே.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக ஆர் அஸ்வினை முன்கூட்டியே அனுப்பி தோனி 9-வது பேட்டராக களமிறங்கினார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கேவின் வெற்றிக்கு 25 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில் 7-வது பேட்டராக களமிறங்கினார் எம்எஸ் தோனி. 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த அவர், சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

எம்எஸ் தோனி குறித்து அவர் பேசியதாவது:

எம்எஸ் தோனியின் உடல், முழங்கால் பழைய மாதிரி இல்லை. அவருடைய முழங்காலில் சற்று தேய்மானம் உள்ளது. அவரால் 10 ஓவர்களுக்கு முழுமையாக பேட் செய்ய முடியாது. எனவே, அன்றைய நாளில் சூழல்களைப் பொறுத்து தன்னால் எந்த வகையில் பங்களிப்பைச் செலுத்த முடியுமோ அதன் அடிப்படையில் முடிவெடுக்கிறார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைப்போல ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் சற்று முன்கூட்டியே களமிறங்குவார். மற்ற நேரங்களில் மற்ற வீரர்களின் திறமை மீது அவர் நம்பிக்கை வைப்பார்" என்றார் ஃபிளெமிங்.