இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மார்கல் நியமனம்! 
விளையாட்டு

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்னே மார்கல் நியமனம்!

செப்டம்பர் 1 முதல் தனது பணியைத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகேஷ் குமார்

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தெ.ஆ. முன்னாள் வீரர் மோர்னே மார்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 அன்று தொடங்குகிறது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற இந்தியா - இலங்கை தொடரில் அபிஷேக் நாயர், டென் டசாட்டே ஆகியோர் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர்களாகவும், திலிப் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டனர். சைராஜ் பஹுதுலே தற்காலிக பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டார்.

மற்றப் பயிற்சியாளர்கள் இலங்கை தொடர் முடிந்தப்பின் அறிவிக்கப்படுவார்கள் என்று கம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக தெ.ஆ. முன்னாள் வீரர் மோர்னே மார்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், செப்டம்பர் 1 முதல் தனது பணியைத் தொடங்குவார் என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கிரிக்பஸிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, ஐபிஎல் போட்டியில் லக்னௌ அணிக்காக கம்பீரும், மோர்னே மார்கலும் இணைந்து செயல்பட்டனர்.

2006 முதல் 2018 வரை சர்வதேச அளவில் விளையாடிய மோர்னே மார்கல் 86 டெஸ்டுகளில் 309 விக்கெட்டுகளையும், 117 ஒருநாள் ஆட்டத்தில் 188 விக்கெட்டுகளையும், 44 டி20 ஆட்டங்களில் 47 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.