ANI
விளையாட்டு

கடந்த 6 மாதங்களாக எனக்கு நேர்ந்ததைப் பார்க்கும்போது..: கண்ணீர் சிந்திய பாண்டியா

கிழக்கு நியூஸ்

கடந்த 6 மாதங்களாக நான் எதிர்கொண்டு வந்த சூழலைப் பார்க்கும்போது இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் என இந்திய அணியின் துணை கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும், பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

கடைசி ஓவரில் 16 ரன்களை கட்டுப்படுத்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த ஹார்திக் பாண்டியா, களத்திலேயே உணர்ச்சிவயப்பட்டு, கண்ணீர் சிந்தினார்.

உலகக் கோப்பை வென்றது குறித்து அவர் கூறியதாவது:

"இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். இருந்தபோதிலும், ஏதோ ஒன்று சரியாக நடக்காமல் இருந்தது. ஆனால், ஒட்டுமொத்த நாடும் எதற்காகக் காத்திருந்ததோ அதை நாங்கள் இன்று அடைந்துவிட்டோம். எனக்கு மிகவும் சிறப்பான தருணம். கடந்த 6 மாதங்கள் என்ன நடந்தது என்பது தெரியும். நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கடுமையாக உழைத்தால், ஜொலிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். என்னால் என்ன செய்ய முடியும் என்பதும் எனக்குத் தெரியும்.

இதுமாதிரியான ஒரு வாய்ப்பு இதை மேலும் சிறப்பாக்குகிறது. நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம். பதற்றம் கொள்ளாமல், நிதானத்துடன் திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் பணியாக இருந்தது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மற்ற பந்துவீச்சாளர்களுக்குப் பாராட்டு சென்றடைய வேண்டும். நான் நிதானமாக இல்லாமல் இருந்தால், நிச்சயமாத அது எனக்கு உதவாது என்பது தெரியும். வீசிய ஒவ்வொரு பந்திலும் முழு அர்ப்பணிப்பைச் செலுத்தினேன். நெருக்கடியான தருணங்களில் அனுபவித்து விளையாடக் கூடியவன் நான்.

ராகுல் டிராவிட்டுக்காக மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். அவர் மிகவும் அற்புதமான மனிதர். இவருடன் இணைந்துப் பணியாற்றியது மகிழ்ச்சி. இதுமாதிரியான ஒரு தருணத்துடன் விடைபெறுவது அற்புதமானது. அவருடன் நல்ல உறவு இருந்தது. நண்பர்கள் ஆனோம். அணி நிர்வாகத்தின் அனைவருக்காகவும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் பாண்டியா.

பேசிக்கொண்டிருக்கும்போது ஹார்திக் பாண்டியாவுக்கு ரோஹித் சர்மா முத்தம் கொடுத்துச் சென்றார்.