பிசிசிஐயின் புதிய தலைவராக மிதுன் மனாஸ் இன்று தேர்வாகியுள்ளார்.
இதற்கு முன்பு பிசிசிஐயின் தலைவராக இருந்த ரோஜர் பின்னியின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவருக்கான போட்டியில் மிதுன் மனாஸ் மட்டுமே விண்ணப்பித்த நிலையில் இன்று நடைபெற்ற பிசிசிஐயின் வருடாந்திரப் பொதுக்குழுவில் பிசிசிஐயின் 37-வது தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார்.
ஜம்முவில் பிறந்த 45 வயது மிதுன் மனாஸ் - ஜம்மு காஷ்மீர் அணியில் முதலில் இடம்பெற்று பிறகு தில்லி அணியிலும் விளையாடியுள்ளார். 157 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 9,714 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சிஎஸ்கே அணிகளில் விளையாடியுள்ளார். செளரவ் கங்குலி, ரோஜர் பின்னிக்கு அடுத்ததாக பிசிசிஐ தலைவர் பதவியை வகிக்கும் 3-வது கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
பிசிசிஐ தேர்வுக்குழுவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த எஸ். ஷரத், சுப்ராதோ பானர்ஜி ஆகியோருக்குப் பதிலாக முன்னாள் வீரர்கள் ஆர்பி சிங்கும் பிரஜ்யான் ஓஜாவும் தேர்வாகியுள்ளார்கள். அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவில் அஜய் ராத்ரா, எஸ்.எஸ். தாஸ் ஆகியோரும் உள்ளார்கள். அகர்கரின் பதவிக்காலம் 2026 டி20 உலகக் கோப்பை வரை உள்ளது. இக்குழுவில் இருந்து விலகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். ஷரத், இளையோர் அணிக்கான தேர்வுக்குழுவின் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.