ANI
விளையாட்டு

நிபந்தனையுடன் ஐபிஎல்லில் விளையாட வரும் மிட்செல் மார்ஷ்!

ஆஸி. அணியின் டி20 கேப்டன் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் 2025 போட்டியில் விளையாட நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

ஆஸி. அணியின் டி20 கேப்டன் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் 2025 போட்டியில் விளையாட நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

33 வயது மார்ஷ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை, இலங்கை தொடர்களில் விளையாடவில்லை. காயம் காரணமாக ஐபிஎல் 2025 போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் முதுகு வலியிலிருந்து ஓரளவு குணமாகியுள்ள மிட்செல் மார்ஷ், ஐபிஎல் 2025 போட்டியில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் லக்னெள அணியில் அவர் ஒரு பேட்டராக மட்டுமே பங்கேற்க வேண்டும், பந்துவீசக் கூடாது என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு இம்பாக்ட் வீரராக லக்னெள அணியில் மிட்செல் மார்ஷ் விளையாட வாய்ப்புள்ளது.

ஐபிஎல்-லில் கடந்த சில வருடங்களாக மிட்செல் மார்ஷின் பந்துவீச்சு பெரிய அளவில் இருந்ததில்லை. கடந்த வருட ஐபிஎல்-லில் 4 ஆட்டங்களில் 7 ஓவர்களையும் 2023 ஐபிஎல்-லில் 9 ஆட்டங்களில் 20 ஓவர்களையும் மட்டுமே அவர் வீசியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக தில்லி அணியில் விளையாடிய மிட்செல் மார்ச்ஷை ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ. 3.3 கோடிக்குத் தேர்வு செய்தது லக்னெள அணி. ஐபிஎல்-லில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு வாரத்துக்குள் லக்னெள அணியினரின் பயிற்சி முகாமில் மிட்செல் மார்ஷும் இணையவுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடாத மற்ற ஆஸி. வீரர்களான பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் காயத்திலிருந்து விரைவில் குணமாகி ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.