மயங்க் யாதவ் 
விளையாட்டு

ஐபிஎல் போட்டியிலிருந்து மயங்க் யாதவ் விலகல்?

யோகேஷ் குமார்

ஐபிஎல் போட்டியில் இனி வரும் ஆட்டங்களில் மயங்க் யாதவ் பங்கேற்பது சந்தேகம் என லக்னௌ அணியின் தலைமை பயிற்சியாளர் லேங்கர் கூறியுள்ளார்.

லக்னௌ அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தொடர்ந்து மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசி எதிரணியை திணறடித்த மயங்க் யாதவ் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 3.1 ஓவர்கள் வீசிய நிலையில் மீண்டும் காய்த்தால் வெளியேறினார்.

இந்நிலையில் அவர் எஞ்சிய ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம் என லேங்கர் கூறியுள்ளார்.

லேங்கர் பேசியதாவது:

“அவர் பிளே ஆஃபில் விளையாடுவார் என எதிர்பார்க்கிறோம். ஆனால், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர் காயத்திலிருந்து மீண்டு வருவது சந்தேகம் தான். ஸ்கேன் செய்து பார்த்ததில் ஏற்கெனவே காயம் ஏற்பட்ட பகுதியில், துரதிஷ்டவசமாக மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. நான் பார்த்தவரை ஒவ்வொரு இளம் பந்துவீச்சாளர்களும் தங்களின் 25-26 வயது வரை பல வித்தியாசமான காயங்களை அனுபவிப்பார்கள். அவர் மிகவும் திறமையானவர். எஞ்சிய ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என்பது லக்னௌ அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்” என்றார்.

லக்னௌ அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.