மார்க்ரம்  @icc
விளையாட்டு

கடைசி வரை போராடியதை எண்ணி...: தெ.ஆ. கேப்டன்

யோகேஷ் குமார்

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது.

பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும் பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தப் பிறகு பேசிய தெ.ஆ. அணியின் கேப்டன் மார்க்ரம், “தோல்வியடைந்தது வேதனையாக இருந்தாலும் பெருமையாக உள்ளது” என்றார்.

மார்க்ரம் பேசியதாவது:

“இதிலிருந்து மீண்டு வர சிறிது நேரம் எடுக்கும். தோல்வியடைந்தது வேதனையாக இருந்தாலும், கடைசி வரை போராடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

பேட்டிங்கும் சிறப்பாக அமைந்தது. இது எட்டக்கூடிய இலக்கு தான். கடைசி பந்து வரை ஆட்டம் சென்றது, கடைசியில் நடந்த ஒரு சில தவறுகளால் ஆட்டம் மாறியது.

எங்களது ஆட்டத்தின் மூலம் இறுதிச் சுற்றில் விளையாட தகுதியான அணி என்பதை நிரூபித்தோம். தெ.ஆ. அணியை பொறுத்தவரை கடைசி வரை போராடுவோம். எனவே இது எங்களுக்கு பெருமையான தருணமாக உள்ளது” என்றார்.