மெல்போர்ன் டெஸ்டில் ஜெயிஸ்வாலின் ரன் அவுட்டுக்கு கோலியைக் குற்றம் சாட்டியுள்ளார் முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
மெல்போர்ன் டெஸ்டின் 2-வது நாளில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பில் ஜெயிஸ்வால் - கோலி கூட்டணியால் நல்ல நிலைமையில் இருந்தது. இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த எதிர்பாராத சம்பவம் நடைபெற்றது.
82 ரன்களுடன் நன்கு விளையாடிக் கொண்டிருந்த ஜெயிஸ்வால், மிட் ஆன் பக்கம் பந்தைத் தட்டிவிட்டு ஓடப் பார்த்தார். கோலியும் ஆரம்பத்தில் ரன்னுக்கு சம்மதம் தெரிவித்ததால் வேகமாக அந்தப் பக்கம் ஓடினார் ஜெயிஸ்வால். எனினும் பந்து நேராக ஃபீல்டரின் கைக்குச் சென்றதால் ஓடுவதை உடனே நிறுத்திக் கொண்டார் கோலி.
இதனால் ஒரே முனையில் கோலியும் ஜெயிஸ்வாலும் நிற்க நேர்ந்தது. இதையடுத்து பேட்டிங் முனையில் ரன் அவுட் ஆனார் ஜெயிஸ்வால். கோலியிடம் நியாயம் கேட்டபடி ஓய்வறைக்கு அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதையடுத்து ஜெயிஸ்வாலின் ரன் அவுட்டுக்கு யார் காரணம் என்கிற விவாதம் ஏற்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின், ஜெயிஸ்வால் ரன் அவுட்டுக்கு கோலியைக் குற்றம் சாட்டினார்.
பந்து மெதுவாக ஃபீல்டரிடம் செல்கிறது. கோலி ரன் அவுட்டாக வாய்ப்பில்லை என நினைக்கிறேன். ரன் ஓட அழைத்தவர் ஜெயிஸ்வால். ஆபத்தான ரன்னாக இருந்தாலும் ஜெயிஸ்வால் தான் ஆபத்தான முனையில் உள்ளார். கோலி அல்ல. பள்ளிச் சிறுவன் செய்கிற தவறு போல பின்னால் திரும்பிப் பார்த்து ரன் இல்லை என கோலி முடிவெடுத்துள்ளார் என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.