மெல்போர்ன் டெஸ்ட் நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பிஜிடி தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்திருந்தது.
நிதிஷ் ரெட்டி 105 ரன்களுடனும் முஹமது சிராஜ் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
நேதன் லயன் ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே நிதிஷ் ரெட்டியால் அடிக்க முடிந்தது. லயான் வீசிய இரண்டாவது ஓவரில் நிதிஷ் ரெட்டி லாங் ஆனிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். நிதிஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 105 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணி தொடக்கம் முதல் தாக்குதல் திட்டத்துடன் பந்துவீசியது. பும்ரா வீசிய மூன்றாவது ஓவரில் கவாஜா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜெயிஸ்வால் தவறவிட்டார். தொடர்ந்து அற்புதமாகப் பந்துவீசி வந்த பும்ரா, கோன்ஸ்டஸை இந்த முறை ஆதிக்கம் செலுத்தவிடவில்லை. அவர் 8 ரன்கள் எடுத்திருந்தபோது, அவரை போல்ட் செய்து அனுப்பினார் பும்ரா.
ஆஸ்திரேலிய பேட்டர்களை ரன் குவிக்க அனுமதிக்காமல் நெருக்கடியை அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள் இந்தியப் பந்துவீச்சாளர்கள். விளைவு, சிராஜ் பந்தில் கவாஜா போல்டானார்.
மார்னஸ் லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் இணை கூட்டணியைக் கட்டமைக்க முயற்சித்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு, சிராஜ் பந்தில் பெரிய டிரைவுக்கு சென்ற ஸ்மித் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
டிராவிஸ் ஹெட் வந்தவுடன் பும்ராவை அழைத்தார் ரோஹித் சர்மா. முதல் பந்திலேயே ஹெட் அவுட். அதே ஓவரில் மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். அலெக்ஸ் கேரியையும் பும்ரா போல்ட் செய்தார். 91 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.
லபுஷேன் 46 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜெயிஸ்வால் தவறவிட்டார். விளைவு, அவர் அரை சதம் அடித்தார். அதைவிட முக்கியம் லபுஷேன் - கம்மின்ஸ் இணை 7-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. 70 ரன்கள் எடுத்த லபுஷேனை சிராஜ் வீழ்த்தினார். ஸ்டார்க் ரன் அவுட் ஆக, கம்மின்ஸ் 41 ரன்களுக்கு ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
173 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. எனினும் நேதன் லயன், ஸ்காட் போலண்ட் இணை கடைசி விக்கெட்டுக்கு கூட்டணி இந்தியப் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றியது. இருவரும் தடுப்பாட்டத்தைக் கடைபிடித்து நேரத்தை செலவிட்டார்கள். களத்தில் நேரத்தை செலவிட்டவுடன் லயன் பேட்டிலிருந்து ரன்கள் வரத் தொடங்கியது.
பும்ரா கடுமையாக முயற்சித்து அவை விக்கெட்டாக மாறவில்லை. 80 ஓவர்கள் ஆனதை அடுத்து, புதிய பந்தை இந்தியா பயன்படுத்தியது. நான்காவது நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். ஸ்லிப் பகுதியில் லயன் கேட்ச் ஆகி, ஆட்டம் முடிந்தது என்று நினைத்தபோது நடுவர் அதை நோ-பால் என அறிவித்தார்.
நான்காவது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். கடைசி விக்கெட்டுக்கு இந்த இணை 110 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை நல்ல நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லயன் 41 ரன்களுடனும் போலண்ட் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.
கடைசி நாள் ஆட்டத்தில் அனைத்து முடிவுகளுக்குமான கதவுகளும் திறந்துள்ளன.