ஐபிஎல் 2025-ல் சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லக்னௌ வீரர் திக்வேஷ் ராதீக்கு ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025-ல் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னௌ 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் இழந்தது.
இதில் 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா சன்ரைசர்ஸின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். இவருடைய விக்கெட்டை திக்வேஷ் ராதீ வீழ்த்தினார். இந்த விக்கெட்டுக்கு பிறகு திக்வேஷ் ராதீ வழக்கம்போல் நோட்புக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக திக்வேஷ் ராதீ மற்றும் அபிஷேக் சர்மா இடையே காட்டமான வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர்கள், சக வீரர்கள் தடுத்து நிறுத்தியும் இருவரும் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார்கள்.
ஆட்டம் முடிந்தபிறகு இரு அணிகளும் கைக்குலுக்கியபோதும், இருவரும் இதுதொடர்பாக சிறிய விவாதத்தில் ஈடுபட்டார்கள். பிறகு, எல்லாம் முடிந்த பிறகு மைதானத்தில் சிரித்தபடி பேசிக்கொண்டார்கள்.
இருந்தபோதிலும், மைதானத்தில் இருவரும் சண்டையிட்டுக்கொண்டது ஐபிஎல் விதிமீறல். இதன் காரணமாக அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திக்வேஷ் ராதீ 4-வது அபராதப் புள்ளியைப் பெற்றார். ஐபிஎல் விதிப்படி ஒரு வீரர் 4 அபராதப் புள்ளியைப் பெற்றால் ஓர் ஆட்டத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். இதன்படி, குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட திக்வேஷ் ராதீக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அபராதப் புள்ளிகள் ஓரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையில் 3 ஆண்டுகளுக்குக் கணக்கில் கொள்ளப்படும். 8 அபராதப் புள்ளிகளைப் பெற்றால், இரு ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்படும். 11 அபராதப் புள்ளிகளைப் பெற்றால் மூன்று ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்று விதி உள்ளது. எனவே, வரவிருக்கும் போட்டிகளில் திக்வேஷ் ராதீ கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 12 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளுடன் திக்வேஷ் ராதீ முதலிடத்தில் உள்ளார். குஜராத் டைடன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான ஆட்டம் மே 22-ல் நடைபெறுகிறது.