லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் முதல் பாதியில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2024-க்கு முன்பு லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் மயங்க் யாதவ். இவருடைய சிறப்பம்சமே மணிக்கு 150 கி.மீ. வேகத்துக்கு வீசமுடியும், அதுவும் அவரால் இதைத் தொடர்ச்சியாக செய்ய முடியும்.
ஐபிஎல் போட்டியில் அறிமுகமான முதலிரு ஆட்டங்களில் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். எனினும், கடந்த ஐபிஎல் பருவத்தில் வெறும் 4 ஆட்டங்களில் மட்டுமே அவரால் விளையாட முடிந்தது. காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் அவர் மேற்கொண்டு விளையாடவில்லை.
எனினும், தனது அசுர வேகத்தால் இந்திய அணியின் தேர்வுக் குழு கவனத்தை ஈர்த்த மயங்க் யாதவ், கடந்த அக்டோபரில் வங்கதேச டி20 தொடரில் சேர்க்கப்பட்டார். இந்தத் தொடரின்போதும் மயங்க் யாதவுக்குக் காயம் ஏற்பட்டது.
இதனிடையே, ஐபிஎல் 2025-க்கு முன்பு லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ. 11 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார் மயங்க் யாதவ்.
மயங்க் யாதவ் தற்போது காயத்தில் குணமடைய பெங்களூருவிலுள்ள பிசிசிஐ மையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் மீண்டும் களத்துக்கு எப்போது திரும்புவார் என்பது இன்னும் உறுதிபடத் தெரியவில்லை.
எனினும், ஐபிஎல் முதல் பாதியில் இவர் பங்கேற்க மாட்டார் என்பது மட்டும் தெரிகிறது. காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்து, பந்துவீசுவதற்கான பணிச் சுமையைப் படிப்படியாக அதிகரித்து, முழு உடற்தகுதிக்கான அனைத்து நிலைகளையும் அடைந்தால், ஐபிஎல் போட்டியின் பின்பகுதியில் இவர் விளையாட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.