விளையாட்டு

14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி!

கடந்த 2011-ல் வெனிசுலாவுக்கு எதிரான சர்வதேச நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்திய வந்தார் மெஸ்ஸி.

யோகேஷ் குமார்

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி அடுத்தாண்டு கேரளத்தில் நடைபெறும் சர்வதேச ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் கிரிக்கெட்டுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும், கேரளத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக மெஸ்ஸிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன.

கடந்த 2011-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற வெனிசுலாவுக்கு எதிரான சர்வதேச நட்பு ரீதியான ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி விளையாடியபோது, மெஸ்ஸியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் விளையாட வருகிறார் மெஸ்ஸி.

இது குறித்து கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான், “அடுத்த ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளத்தில் நடைபெறும் நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடுகிறது, இதில் மெஸ்ஸியும் பங்கேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் அர்ஜெண்டினா அணி கேரளத்துக்கு வருகை தருவதன் மூலம் வரலாறு படைக்கவுள்ளோம் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.