ரோஹன் போபண்ணா ஓய்வு! ANI
விளையாட்டு

சர்வதேச டென்னிஸிலிருந்து ரோஹன் போபண்ணா ஓய்வு!

கடந்த ஜனவரியில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிக வயதில் வென்றவர் என்கிற பெருமையை பெற்றார்.

யோகேஷ் குமார்

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

நேற்று நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்களான போபண்ணா மற்றும் பாலாஜி 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் வெளியேறினர்.

இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.

2002 முதல் சர்வதேச டென்னிஸில் விளையாடிய இவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 26 பட்டங்களை வென்றுள்ளார்.

கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை போபண்ணா 43 வயது 329 நாள்களில் வென்று, மிக அதிக வயதில் இந்தப் பட்டத்தை வென்றவர் என்கிற பெருமையையும் பெற்றார்.

மேலும், அதிக வயதில் நெ.1 இடத்தைப் பிடித்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய நிலையில், “இந்தியாவுக்காக இதுவே எனது கடைசி ஆட்டம் ஆகும். 2002 முதல் விளையாட தொடங்கி இந்தியாவுக்காக 20 ஆண்டுகளுக்கு மேல் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. இதனை என்ணி பெருமை கொள்கிறேன்” என்று கூறி தனது ஓய்வை அறிவித்தார்.