கோப்புப்படம் படம்: https://x.com/windiescricket
விளையாட்டு

இந்திய டெஸ்ட் தொடர்: பிராத்வைட் இல்லாத மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு! | India Test Series | West Indies Squad |

கிரெய்க் பிராத்வைட் மேற்கிந்தியத் தீவுகளுக்காக 100 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.

கிழக்கு நியூஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் அணியில் சேர்க்கப்படவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் அணி அக்டோபரில் இந்தியாவுக்குப் பயணம் செய்து இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 2-ல் அஹமதாபாதிலும் இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 10-ல் தில்லியிலும் தொடங்கவுள்ளன.

இந்தத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் இழந்தது. குறிப்பாக, இந்தத் தொடரில் கிங்ஸ்டனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் 27 ரன்களுக்கு சுருண்டு டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் எனும் மோசமான சாதனையைப் படைத்தது.

இதன் காரணமாக பிரையன் லாரா, கிளைல் லாய்ட், விவ் ரிச்சர்ட்ஸ், டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ், ஷிவ்நரைன் சந்தர்பால், தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி உள்ளிட்டோர் அடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டியது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம். கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பார்வைகள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் மூலம் உடனடித் தீர்வு காண முடியாது என்றும் இது ஒரு நீண்ட நெடும் பயணம் என்றும் கூட்டத்தில் பங்கெடுத்தவர்களால் குறிப்பிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து தான் இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்காக 100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள கிரெய்க் பிராத்வைட் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டில் இவர் வெளியில் உட்கார வைக்கப்பட்டிருந்தார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த கீசி கார்டி, ஜொஹான் லெய்ன் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோரும் இந்திய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. அடுத்தடுத்து வரவிருக்கும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்கள் மற்றும் போட்டிகளை மனதில் கொண்டு சுழற்பந்துவீச்சாளர் குடகேஷ் மோடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இடக்கை சுழற்பந்துவீச்சாளர் கேரி பியர் டெஸ்டில் அறிமுகமாகவுள்ளார். துணை கேப்டன் ஜோமெல் வாரிகன் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக உள்ளார். கூடுதலாக கேப்டன் ராஸ்டன் சேஸும் பந்தைச் சுழற்றக் காத்திருக்கிறார். பேட்டர்கள் அலிக் ஆதனேஸ் மற்றும் டேஜ்நரைன் சந்தர்பால் அணிக்குத் திரும்பியுள்ளார்கள். ஆண்டர்சன் ஃபிலிப், அல்ஸாரி ஜோசஃப், ஷமர் ஜோசஃப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் வேகப்பந்துவீச்சுப் பொறுப்பை ஏற்கிறார்கள்.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 24-ல் இந்தியா வருகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2018-19 தொடரில் இந்தியாவுக்குக் கடைசியாக வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்தவர்களில் ராஸ்டன் சேஸ், ஷே ஹோப், அல்ஸாரி ஜோசஃப் மற்றும் ஜோமெல் வாரிகன் ஆகியோர் மட்டுமே இந்தத் தொடருக்கான அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி

ராஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமெல் வாரிகன் (து.கே.), டேஜ்நரைன் சந்தர்பால், பிரண்டன் கிங், கெவ்லான் ஆண்டர்சன், ஷே ஹோப், ஜான் கேம்பெல், அலிக் ஆதனேஸ், டெவின் இம்லாக், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆண்டர்சன் ஃபிலிப், அல்ஸாரி ஜோசஃப், ஷமர் ஜோசஃப், ஜேடன் சீல்ஸ், கேரி பியர்.

West Indies | West Indies Squad | Team India | India Test Series | Kraigg Brathwaite | Roston Chase |