கோலி ANI
விளையாட்டு

சுயமரியாதைக்காக விளையாடுகிறோம்: விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோலி

யோகேஷ் குமார்

தன்னுடைய அணிக்காக ஆட்டங்களை வெல்வதே தனக்கு முக்கியம் என விராட் கோலி பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் வில் ஜேக்ஸ் அதிரடியாக விளையாடி சதமடித்தார். கோலி ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 70 ரன்களை விளாசினார். சமீபத்தில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பலரும் விமர்சித்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஆட்டத்திற்கு பிறகு பேசிய கோலி, “விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை” என்றார்.

கோலி பேசியதாவது: “என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் குறித்தும், நான் சுழற்பந்தை சரியாக விளையாடுவதில்லை என பேசுபவர்களே புள்ளிவிவரங்களை பற்றி யோசிப்பார்கள். எனக்கு என்னுடைய அணிக்காக ஆட்டங்களை வெல்வதுதான் முக்கியம். அதனை 15 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறேன்.

வர்ணனை பெட்டியில் அமர்ந்து விமர்சிப்பவர்கள், இதுபோன்ற சூழல்களில் இருந்திருப்பீர்களா? என்று தெரியவில்லை. தங்கள் சொந்தக் கருத்துகளை அங்கே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், களத்தில் எப்போதும் அணிக்காக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியும். நாங்கள் சுயமரியாதைக்காக விளையாடுகிறோம். முதல் பாதியில் விளையாடியதை போல் மீண்டும் விளையாட விரும்பவில்லை. எனவே களத்தில் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துகிறோம்” என்றார்.

விராட் கோலி 10 ஆட்டங்களில் 500 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.