இந்தியா, இங்கிலாந்து இடையிலான லார்ட்ஸ் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியின் கை சற்று ஓங்கியிருக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. பாஸ்பால் ஆட்டத்தைக் கைவிட்டு நிதான போக்கைக் கடைபிடித்தது.
ஜோ ரூட் 99 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. புதிய பந்தில் 3 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்ததால், இன்று காலை பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜோ ரூட் (Joe Root) டெஸ்டில் 37-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
தனது இரண்டாவது ஓவரில் பென் ஸ்டோக்ஸை (44) போல்ட் செய்து தாக்குதலைத் தொடர்ந்தார் பும்ரா. முஹமது சிராஜ் (Mohammed Siraj) ஓவரில் ஜேமி ஸ்மித் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கேஎல் ராகுல் தவறவிட்டார்.
அடுத்த ஓவரிலேயே ஜோ ரூட்டை (104) போல்ட் செய்த பும்ரா, கிறிஸ் வோக்ஸையும் முதல் பந்திலேயே காலி செய்தார். 300-க்குள் சுருண்டுவிடுமோ என்று நினைத்தபோது, ஜேமி ஸ்மித் (Jamie Smith) மற்றும் பிரைடன் கார்ஸ் (Brydon Carse) கூட்டணி அமைத்தார்கள். உணவு இடைவேளை வரை இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜேமி ஸ்மித் 52 பந்துகளில் அரை சதம் அடித்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. ஜேமி ஸ்மித்தை (51) முஹமது சிராஜ் வீழ்த்தினார். ஜேமி ஸ்மித் - பிரைடன் கார்ஸ் இணை 84 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு தலைவலி கொடுத்தது.
ஜோஃப்ரா ஆர்ச்சரை போல்ட் செய்ததன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா (Jasprit Bumrah). 77 பந்துகளில் அரை சதம் அடித்த பிரைடன் கார்ஸ் கடைசி விக்கெட்டாக 56 ரன்களுக்கு சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாஸ்பால் ஆட்டத்தைக் கைவிட்ட இங்கிலாந்தின் ரன் ரேட் 3.44.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசினார் யஷஸ்வி ஜெயிஸ்வால். ஆனால், 4 வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் களமிறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) நேரம் எடுத்துக்கொள்ளாமல் தனது முதல் ஓவரிலேயே ஜெயிஸ்வாலை (13) வீழ்த்தினார்.
கேஎல் ராகுல் (KL Rahul) மற்றும் கருண் நாயர் (Karun Nair) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கருண் நாயர் மீண்டும் நல்ல இன்னிங்ஸுக்கான தொடக்கத்தை மட்டும் கொடுத்துவிட்டு அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லுக்கு இந்த முறை பெரிய இன்னிங்ஸ் அமையவில்லை. 16 ரன்களுக்கு வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, விக்கெட் கீப்பிங் செய்யாத ரிஷப் பந்த் (Rishabh Pant) பேட்டிங் செய்ய களமிறங்கினார். இவர் 3 பவுண்டரிகள் அடித்தார். கேஎல் ராகுல் 97 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் விக்கெட்டை இழக்காமல் இருந்தார்கள்.
2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து இன்னும் 242 ரன்கள் பின்தங்கியுள்ளது. கேஎல் ராகுல் 53 ரன்களுடனும் ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.