மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் உள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அஹமதாபாதில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஜொஹான் லெய்ன், கேரி பியர் ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக அறிமுகமானார்கள். இந்திய அணியில் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
தொடக்கம் முதலே மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கூட்டணி அமையவில்லை. தொடக்க பேட்டர் டேஜ்நரைன் சந்தர்பால் ரன் ஏதும் எடுக்காமல் முஹமது சிராஜிடம் வீழ்ந்தார். மற்றொரு தொடக்க பேட்டர் ஜான் கேம்பெல் 8 ரன்களுக்கு ஜஸ்பிரித் பும்ராவிடம் வீழ்ந்தார். சிராஜ் அற்புதமாகப் பந்துவீசி பிரண்டன் கிங், அலிக் ஆதனேஸை அடுத்தடுத்து வீழ்த்த 42 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்தியத் தீவுகள்.
கேப்டன் ராஸ்டன் சேஸ் மற்றும் ஷே ஹோப் கூட்டணி 48 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி பந்தில் குல்தீப் யாதவின் அற்புதமான பந்தில் ஹோப் (26) போல்டாகி ஏமாற்றமளித்தார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பந்துவீச வந்த சிராஜ், சேஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த பேட்டர்களில் ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டும் 32 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் ரன் சேர்க்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் முஹமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணியில் யஷஸ்வி ஜெயிஸ்வால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் அனுபவ பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 68 ரன்கள் சேர்த்தார்கள். 36 ரன்கள் எடுத்த ஜெயிஸ்வால் முதல் விக்கெட்டாக ஜேடன் சீல்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ராஸ்டன் சேஸ் தனது முதல் ஓவரிலேயே சாய் சுதர்சன் (7) விக்கெட்டை வீழ்த்தினார்.
எனினும், கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்கள். கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 41 ரன்கள் பின்தங்கியுள்ளது. கேஎல் ராகுல் 53 ரன்களுடனும் கில் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.
Ind v WI | India v West Indies | KL Rahul | Kuldeep Yadav | Mohammed Siraj | Jasprit Bumrah | Ahmedabad Test |