கடந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேகேஆர் அணி, இந்தாண்டு ஏலத்தில் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்தது.
அந்த அணியின் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயரை ரூ. 23.75 கோடிக்குத் தேர்வு செய்தது. மேலும் டி காக், ரகுவன்ஷி, குர்பாஸ், மொயீன் அலி, ரஹானே போன்றவர்களையும் தேர்வு செய்தது.
ஏலத்தில் கேகேஆர் அணி 5 வீரர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பை நூலிழையில் இழந்தது.
ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கஸன்ஃபரை தேர்வு செய்ய மும்பையுடன் கடும் போட்டி நிலவியது. அவருக்காக ரூ. 4.6 கோடி வரை சென்று பார்த்தது. கடைசியில் ரூ. 4.8 கோடிக்கு அல்லாஹ் கஸன்ஃபரை தேர்வு செய்தது மும்பை.
பில் சால்டுக்காக ரூ. 11.25 கோடி வரை சென்றும் அவரை ரூ. 11.50 கோடிக்கு ஆர்சிபியிடம் இழந்தது கேகேஆர்.
கேகேஆர் அணியில் ஏற்கெனவே விளையாடிய ராகுல் திரிபாதி மற்றும் முஹமது ஷமியையும் தேர்வு செய்ய கேகேஆர் ஆர்வம் காட்டியது. ஷமிக்கு ரூ. 9.75 கோடி வரை சென்றும் அவரை ரூ. 10 கோடிக்கு சன்ரைசர்ஸிடம் இழந்தது கேகேஆர். அதேபோல ராகுல் திரிபாதிக்கு ரூ. 3.2 கோடி வரை சென்று பார்த்தது. கடைசியில் ரூ. 3.4 கோடிக்கு திரிபாதியை தேர்வு செய்தது சிஎஸ்கே.
அபினவ் மனோகரை ரூ. 3.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் தேர்வு செய்தது. ரூ. 3 கோடி வரை முயன்றது கேகேஆர்.