சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய வீரர்கள் வாய்ப்புகளை இழந்துள்ளார்கள்.
இந்திய ஒருநாள் அணியில் முக்கிய வீரராக விளங்கிய முஹமது சிராஜ், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய பந்தில் ஓவர்களை வீசாவிட்டால் சிராஜால் பெரிய அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று ரோஹித் சர்மா அவருடைய நீக்கத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய டி20யில் தன்னுடைய இடத்தை உறுதிபடுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன், ஒருநாள் அணியில் ரிஷப் பந்திடம் தனது இடத்தை மீண்டும் இழந்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடாதது பேசுபொருளானது.
இந்திய டி20 அணியில் தொடர்ந்து விளையாடி வரும் வருண் சக்ரவர்த்தி, ஆல்ரவுண்டர்களாக விளங்கும் சுழற்பந்து வீச்சாளர்களால் அணியில் நுழைய முடியாமல் உள்ளார். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் 6 இன்னிங்ஸில் 12.16 சராசரியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் அர்ஷ்தீப் சிங்குக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இருந்தபோதிலும் வருண் சக்ரவர்த்திக்கு இதுதான் நிலை.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் மட்டுமே பந்துவீச்சாளராக உள்ளார். அறுவைச் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வந்தாலும், இடக்கை மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் என்கிற வேறுபாட்டைக் கொடுப்பதால், இவர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் நம்பமுடியாத அளவுக்கு ரன்கள் குவித்துள்ளார் கருண் நாயர். 7 இன்னிங்ஸில் 5 சதங்கள், 1 அரை சதம் உள்பட 6 முறை ஆட்டமிழக்காமல் 752 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி 752.00. ஸ்டிரைக் ரேட் 125.96.
"இது மாதிரியான செயல்பாடுகள் அடிக்கடி நிகழாது. ஆனால், 15 பேரைத் தேர்வு செய்ய மட்டுமே இடம் உள்ளது. அனைவரையும் அணியில் சேர்க்க முடியாது" என தேர்வுக் குழுத் தலைவர் அகர்கர் கூறினார்.
அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "தற்போதைய நிலையில், பும்ரா குறித்து உறுதியாகக் கூற முடியவில்லை. எனவே, அவருடையப் பணியை யாரேனும் ஏற்க வேண்டும் என்பதால், அர்ஷ்தீப் சிங்கைத் தேர்வு செய்துள்ளோம்" என்றார்.