இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெதார் ஜாதவ் பாஜகவில் இணைந்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்தவர் கெதார் ஜாதவ். உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் மஹாராஷ்டிர அணிக்காக ஜாதவ் விளையாடியுள்ளார். 2013-14-ல் ரஞ்சி கோப்பையில் 87.35 சராசரியில் 1,223 ரன்கள் எடுத்து இந்திய அணியில் இடம்பிடித்தார்.
2014-ல் இந்திய அணிக்காக அறிமுகமான ஜாதவ் 73 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 42.09 சராசரியில் 1,389 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் தில்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.
2007-08 முதல் 2024 வரை கிரிக்கெட் விளையாடி வந்த ஜாதவ் கடந்தாண்டு ஜூன் 3, 2024-ல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஜாதவ் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார். மும்பையில் மஹாராஷ்டிர அமைச்சரும் மஹாராஷ்டிர பாஜக தலைவருமான சந்திரசேகர் பாவன்குலே முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார்.
"சத்ரபதி சிவாஜிக்குத் தலை வணங்குகிறேன். பாஜக வளர்ச்சிக்கான அரசியலைச் செய்கிறது. பாவன்குலே தலைமையில் இன்று பாஜகவில் இணைகிறேன்" என்றார் கெதார் ஜாதவ்.