கோப்புப்படம் 
விளையாட்டு

கருண் நாயரை அவுட் செய்யவே முடியாதா?: விஜய் ஹசாரேவில் மீண்டும் அதிரடி!

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி வரலாற்றில் ஒரு பருவத்தில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை கருண் நாயர் படைத்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விதர்பா கேப்டன் கருண் நாயர் மீண்டும் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 88 ரன்கள் விளாசியுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் விதர்பா, மஹாராஷ்டிரம் அணிகள் விளையாடி வருகின்றன. விதர்பா அணி அரையிறுதிக்கு வந்ததில் முக்கியப் பங்காற்றியவர் அந்த அணியின் கேப்டன் கருண் நாயர். இரண்டாவது அரையிறுதிக்கு முன்பு வரை 6 இன்னிங்ஸில் 5 சதங்கள் உள்பட 664 ரன்கள் குவித்திருந்தார் கருண் நாயர்.

இன்றைய அரையிறுதியில் டாஸ் வென்ற மஹாராஷ்டிர கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

விதர்பா தொடக்க பேட்டர்கள் துருவ் ஷோரே மற்றும் யஷ் ரதோட் சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 34.4 ஓவர்களில் 224 ரன்கள் சேர்த்தது. யஷ் ரதோட் 116 ரன்களுக்கும், துருவ் ஷோரே 114 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

மூன்றாவது பேட்டராக களமிறங்கிய கேப்டன் கருண் நாயர், தனது மிரட்டலான ஃபார்மை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 88 ரன்கள் விளாசினார். ஜிதேஷ் சர்மாவும் ஒத்துழைப்பு தந்து கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

50 ஓவர்களில் விதர்பா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 380 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் கருண் நாயர் 3 பவுண்டரிகள், இரு சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் விளாசினார். இன்னும் ஒரு ஓவர் கிடைத்திருந்தால், நடப்பு விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் 6-வது சதத்தைப் பூர்த்தி செய்து வரலாறு படைத்திருப்பார் கருண் நாயர்.

இந்தப் போட்டியில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் கருண் நாயர். மற்ற 6 இன்னிங்ஸிலும் இவர் ஆட்டமிழக்கவில்லை. 7 இன்னிங்ஸில் 752 ரன்கள் விளாசியுள்ள இவருடைய பேட்டிங் சராசரி 752.00 ஆக உள்ளது.

இதன் மூலம், விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி வரலாற்றில் ஒரு பருவத்தில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை கருண் நாயர் படைத்துள்ளார். 2022-23-ல் மஹாராஷ்டிர கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் 660 ரன்கள் குவித்த சாதனையாக இருந்தது.