விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் ஒருமுறை கூட ஆட்டமிழக்காமல் தொடர்ச்சியாக மொத்தம் 527 ரன்களுக்கு மேல் குவித்து கருண் நாயர் உலக சாதனை படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விதர்பா அணி 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. விதர்பா இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அந்த அணியின் கேப்டன் கருண் நாயர்.
விளையாடிய 5 ஆட்டங்களில் கருண் நாயர் நான்கு சதங்கள் அடித்துள்ளார். முதல் நான்கு ஆட்டங்களிலும் ஆட்டமிழக்காமல் முறையே 112*, 44*, 163*, 111* ரன்கள் குவித்தார். இதில் ஆட்டமிழக்காமல் 111* ரன்கள் எடுத்தது தமிழ்நாட்டுக்கு எதிராக.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக இன்று விளையாடியது விதர்பா. இதில் முதலில் பேட் செய்த உத்தரப் பிரதேசம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. விதர்பா அணி 47.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் கருண் நாயர் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் ஹசாரே போட்டியில் கருண் நாயர் அடிக்கும் நான்காவது சதம் இது.
இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒருமுறை கூட ஆட்டமிழக்காமல் தொடர்ச்சியாக 500 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
2010-ல் நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்லின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒருமுறை கூட ஆட்டமிழக்காமல் தொடர்ச்சியான இன்னிங்ஸில் 527 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையையும் கருண் நாயர் முறியடித்துள்ளார்.
நடப்பு விஜய் ஹசாரே போட்டியில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மட்டுமே ஆட்டமிழந்துள்ள கருண் நாயர் இதுவரை மொத்தம் 542 ரன்கள் குவித்துள்ளார்.
உள்நாட்டுப் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வந்த கருண் நாயர் 2023-ல் விதர்பாவுக்கு இடம்பெயர்ந்தார். நடப்பு விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விதர்பா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.