ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கூட்ட நெரிசலால் பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஏ. சங்கரும், பொருளாளர் இ.எஸ். ஜெயராமும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 5 அன்று, தங்கள் ராஜினாமா கடிதங்களை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவரிடம் சமர்ப்பித்ததாக, சங்கர் மற்றும் ஜெய்ராம் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறியதாவது,
`...கடந்த இரண்டு நாட்களாக நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாகவும், எங்கள் பங்கு இதில் மிகவும் குறைவாகவே இருந்தபோதிலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவர் ரகுராம் பட், செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர், சின்னசாமி மைதானத்தின் நுழைவாயிலை நிர்வகிக்கும் பொறுப்பும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பொறுப்பும் தங்கள் சங்கம் வசம் இல்லை என்றும், விதான் சௌதாவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்த அனுமதி கோரியதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் வாதங்களை சமர்ப்பித்திருந்தனர்.
விதான் சௌதாவில் நடைபெற்ற பாராட்டு விழா பெரிய அளவில் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் நடந்து முடிந்திருந்தாலும், சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கடுமையான கூட்ட நெரிசல் நிலவியது. ஆர்சிபியின் சமூக ஊடக பதிவின் அழைப்பைத் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் மைதானத்திற்கு வெளியே கூடியிருந்தனர், ஆனால் அந்த அழைப்பு பின்னர் நீக்கப்பட்டது.
முன்பே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெற்றி பேரணி அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது. ஆனால் வெளியே கூட்ட நெரிசலால் பொதுமக்கள் உயிரிழந்தபோதும், மைதானத்திற்குள் தொடர்ந்து நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.