விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி இறுதிச் சுற்றில் விதர்பாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகம் சாம்பியன் ஆகியுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி இறுதிச் சுற்றில் கர்நாடகம், விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற விதர்பா கேப்டன் கருண் நாயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
கர்நாடகம் தொடக்கத்தில் சற்று தடுமாறி 67 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆர் ஸ்மரன் மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீஜித் சிறப்பாகக் கூட்டணியை அமைத்து விதர்பாவைத் திணறடித்தார்கள்.
இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தார்கள். 47 பந்துகளில் அரைசதம் அடித்த கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடியைக் காட்டுவதற்கான அடித்தளம் அமைந்துவிட்டதால், கர்நாடக பேட்டர்கள் விதர்பா பந்துவீச்சை நொறுக்கினார்கள்.
ஸ்மரன் 89 பந்துகளில் சதமடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார். கர்நாடகம் 300 ரன்களை கடந்து 350-ஐ நெருங்கியதற்கு மற்றொரு முக்கியக் காரணம், அபினவ் மனோஹர். இவர் 42 பந்துகளில் 79 ரன்கள் விளாசி 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
கர்நாடகம் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது.
349 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விதர்பா களமிறங்கியது. தொடக்க பேட்டர் யஷ் ரதோட் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, விஜய் ஹசாரே கோப்பையில் அற்புதத்தை நிகழ்த்தி வந்த கருண் நாயர் களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் ஒரேயொரு முறை மட்டுமே ஆட்டமிழந்த கருண் நாயர், இறுதிச் சுற்றில் 27 ரன்களுக்கு போல்டாகி ஏமாற்றமளித்தார்.
தொடக்க பேட்டர் துருவ் ஷோரே மட்டும் நம்பிக்கையளிக்க, மற்ற பேட்டர்களால் பெரிய கூட்டணியைக் கட்டமைக்க உதவ முடியவில்லை. கடைசி நேரத்தில் ஹர்ஷ் துபே அதிரடி காட்டியும் பலனில்லை.
துருவ் ஷோரே 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்ஷ் துபே 30 பந்துகளில் 63 ரன்கள் விளாசி கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
விதர்பா அணியால் 48.2 ஓவர்களில் 312 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகம் விஜய் ஹசாரே கோப்பையை வென்றது. விஜய் ஹசாரே கோப்பை இறுதிச் சுற்றில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத கர்நாடகம், 5-வது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது.
இறுதிச் சுற்றில் சதமடித்த ஸ்மரன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 8 இன்னிங்ஸில் 389.50 சராசரியில் 779 ரன்கள் குவித்த கருண் நாயர் தொடர் நாயகன் விருதை வென்றார்.