கோப்புப்படம் 
விளையாட்டு

நியூசிலாந்துக்காக விளையாடுவதைத் தொடர்ந்து தவிர்க்கும் வில்லியம்சன்: விவரம் என்ன? | Kane Williamson |

இந்தியா, இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வகையில் வீரர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறாமல் சாதாரண ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில்லியம்சன் விலகியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் எந்த நாட்டுக்காக விளையாடினாலும், அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இந்திய வீரர்கள் பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். நியூசிலாந்து வீரர்கள் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். கடந்த சில வருடங்களாகவே டி20 லீக் போட்டிகளின் வருகை பெரும் கவர்ச்சியைக் கொண்டு வருவதால், வீரர்கள் பலர் இதில் விளையாட கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வீரர்கள் யாரும் எந்த டி20 லீக் போட்டிகளிலும் விளையாடக் கூடாது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள ஆர் அஸ்வின், பிசிசிஐயுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட பிறகே, ரத்து செய்த பிறகே, மற்ற போட்டிகளில் பங்கேற்கிறார்.

ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க போன்ற நாடுகளில் ஒப்பந்த முறைகளில் மாற்றம் இருக்கும். வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்கள் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படும். சர்வதேச அணிக்காக மற்றும் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வகையில் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள்.

நியூசிலாந்து அணிக்காகப் பிரதானமாக விளையாடக்கூடிய வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறுவார்கள். ஆனால் கேன் வில்லியம்சன், டெவான் கான்வே, ஃபின் ஆலென், லாக்கி ஃபெர்குசன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் சாதாரண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். இதன்மூலம், டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை இவர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த 5 வீரர்களும் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறாதபோதிலும், சாதாரண ஒப்பந்தம் மூலமாகவே நியூசிலாந்துக்காக விளையாட முடியும், உயர் செயல்பாட்டுத் திறன் அமைப்பின் வரம்புக்குள் வர முடியும், டி20 லீக் போட்டிகளிலும் விளையாட முடியும். அதேசமயம், ஒப்பந்த விதிகளின்படி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் மற்றும் இப்போட்டிக்கு முந்தைய டி20 தொடர்களிலும் பங்கெடுக்க வேண்டும்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடன் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதிலிருந்து, கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ஒப்பந்த விதிகளிலிருந்து கேன் வில்லியம்சனுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்காவுடனான முத்தரப்பு டி20 தொடர் மற்றும் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. இதற்குப் பதிலாக டி20 பிளாஸ்ட், கவுன்டி சாம்பியன்ஷிப், தி ஹண்ட்ரட் போட்டிகளில் அவர் விளையாடினார்.

அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 4 இடையே டி20 ஆட்டங்களில் மட்டும் அறுவைச் சிகிச்சை காரணமாக, ஃபின் ஆலென் விளையாட மாட்டார்.

Kane Williamson | New Zealand | New Zealand Cricket | NZC Central Contract | NZC Casual Contract |