லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸின் வியூகம் வகுப்பதற்கான ஆலோசகராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் இறுதிச் சுற்றில் நியூசிலாந்துக்காக விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறாமல் உள்ளார்.
இதற்குப் பதிலாக சாதாரண ஒப்பந்தத்தில் அவர் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரிலிருந்தும் அவர் விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நியூசிலாந்துக்காக அவ்வப்போது மட்டுமே அவர் விளையாடுவார் எனத் தெரிகிறது.
எனவே, அவர் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் தான் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கேன் வில்லியம்சன் இணைந்துள்ளார்.
கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகளில் ஒரு வீரராக கேன் வில்லியம்சனின் பங்களிப்பு என்பது மிகக் குறைவு. 2023 ஐபிஎல் போட்டியில் முதல் ஆட்டத்திலேயே அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், மீதமுள்ள ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. ஐபிஎல் 2024-ல் குஜராத் டைடன்ஸ் அணிக்காக இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலத்தில் எந்த அணியாலும் இவர் தேர்வு செய்யப்படவில்லை.
இந்தச் சூழலில் லக்னௌ அணியில் ஒரு வீரராக இல்லாமல் வியூகம் வகுப்பதற்கான ஆலோசகராக வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடினார் கேன் வில்லியம்சன்.
ஐபிஎல் 2025-ல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7-வது இடத்தைப் பிடித்தது. எனவே, ஐபிஎல் 2026-க்கு முன்பு அந்த அணி நிறைய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
Kane Williamson | Lucknow Super Giants | IPL | IPL 2026 | LSG |