கோப்புப்படம் ANI
விளையாட்டு

ஹர்ஷித் ராணா சர்ச்சை: ஜாஸ் பட்லர் அதிருப்தி!

"நிச்சயமாக ஷிவம் துபேவுக்கான சரியான மாற்று வீரர் ஹர்ஷித் ராணா கிடையாது."

கிழக்கு நியூஸ்

புனே டி20யில் ஷிவம் துபேவுக்குப் பதில் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கியதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து முதலில் டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் மூன்று டி20 ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கடைசியாக ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20யில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 புனேயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்று டி20 தொடரை வென்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் ஷிவம் துபே பேட்டிங் செய்தபோது அவருடைய தலைக்கவசத்தைப் பந்து தாக்கியது. இதனால் அவருக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டதால் இந்திய அணி பந்துவீசியபோது மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கினார். அவர் அற்புதமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

ஐசிசி விதிமுறைகளின்படி ஒரு வீரர் தலைக்கவசத்தில் தாக்கப்பட்டு தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனால் அவருடைய திறமைகளைக் கொண்ட ஒரு வீரரையே தேர்வு செய்யமுடியும். அதன்படி ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா தேர்வானதற்குத் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இங்கிலாந்து டி20 கேப்டன் ஜாஸ் பட்லர்.

"நிச்சயமாக ஷிவம் துபேவுக்கான சரியான மாற்று வீரர் ஹர்ஷித் ராணா கிடையாது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படியென்றால் ஷிவம் துபே கூடுதலாக மணிக்கு 25 மைல் வேகமாகப் பந்துவீச வேண்டும். அல்லது ஹர்ஷித் ராணா தன்னுடைய பேட்டிங்கை இன்னும் மெருக்கேற்ற வேண்டும். இதுகுறித்த தெளிவுக்காக ஆட்ட நடுவர் ஜகவல் ஸ்ரீநாத்திடம் நாங்கள் கேள்விகளை எழுப்புவோம். அதேசமயம் இந்த ஒரு காரணத்துக்காக நாங்கள் தோற்கவில்லை" என்றார் பட்லர்.