ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் டங் வென்றார். 
விளையாட்டு

ஆஷஸ்: மெல்போர்னில் இங்கிலாந்து வெற்றி! | Ashes |

கடந்த 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெறும் முதல் வெற்றி இது.

கிழக்கு நியூஸ்

மெல்போர்னில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்டுகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்டுகளிலும் தோல்வியடைந்ததன் மூலம், ஆஷஸ் தொடரை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்தது. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்டாக மெல்போர்னில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக மைக்கேல் நீசர் 35 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் டங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணியில் துணை கேப்டன் ஹாரி புரூக் 41 ரன்கள் எடுத்தார். கஸ் அட்கின்சன் 28 ரன்கள் எடுத்தார். மற்ற எவரும் சோபிக்கவில்லை. இதனால், 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மைக்கேல் நீசர் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

முதல் நாளில் ஒரு ஓவர் மட்டுமே மீதமிருந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்டராக டிராவிஸ் ஹெட்டுடன் ஸ்காட் போலண்ட் களமிறங்கினார். 6 பந்துகள் அவர் தாக்குப்பிடித்து விளையாடினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்து 46 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. முதல் நாள் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகள் விழுந்தது, மெல்போர்ன் ஆடுகளத்தின் தரம் குறித்து விமர்சனத்தை எழுப்பியது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மீண்டும் அதகளப்படுத்த, ஆஸ்திரேலிய பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறினார்கள். உணவு இடைவேளைக்கு முன்பு 98 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது ஆஸ்திரேலியா.

உணவு இடைவேளைக்குப் பிறகு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடைசி வரை களத்தில் இருந்தாலும், மற்ற பேட்டர்கள் யாரும் ஒத்துழைக்கவில்லை. 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 46 ரன்கள் எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம், இங்கிலாந்து வெற்றிக்கு 175 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்து தொடக்க பேட்டர்கள் ஸாக் கிராலே மற்றும் பென் டக்கெட் அதிரடியாக விளையாடினார்கள். குறிப்பாக டக்கெட் மிக வேகமாக விளையாட இங்கிலாந்து அணி 7-வது ஓவரிலேயே 50 ரன்களை தாண்டியது.

முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், டக்கெட் 26 பந்துகளில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென பிரைடன் கார்ஸ் 3-வது பேட்டராக களமிறக்கப்பட்டார். இவர் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்துக்கு அந்தத் திட்டம் கைக்கூடவில்லை.

ஸாக் கிராலே மற்றும் ஜேக்கப் பெத்தெல் சிறப்பாகக் கூட்டணி அமைத்து விளையாடினார்கள். இங்கிலாந்து அணி மெது மெதுவாக வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்தது. நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த கிராலே 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 40 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வந்த பெத்தெல் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைவு என்பதால் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விக்கெட் திருப்புமுனையாக அமையவில்லை. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த துணை கேப்டன் ஹாரி புரூக் இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தார். 32.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புரூக் 18 ரன்களுடனும் ஜேமி ஸ்மித் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

தொடர்ந்து 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்து ஆஷஸை இழந்திருந்த இங்கிலாந்து அணிக்கு மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி ஆறுதலாக அமைந்தது.

அதுமட்டுமின்றி, கடந்த 15 ஆண்டுகளில் 16 தோல்விகள் மற்றும் இரு டிராகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெறும் முதல் வெற்றி இது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாஷ் டங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பெர்த் டெஸ்டில் வெறும் 847 பந்துகளில் ஆட்டம் முடிவடைந்தது. தற்போது மெல்போர்னில் 852 பந்துகளில் ஆட்டம் முடிவடைந்துள்ளது. ஆஷஸில் இரு டெஸ்டுகள் இரு நாள்களுக்குள் நிறைவடைந்துள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.

இரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 4 அன்று தொடங்குகிறது.

On an absolute bowling heaven at Melbourne Cricket Ground (MCG), England, though having lost the Ashes to Australia, broke their 18-match winless streak Down Under with a four-wicket win over the hosts in the Boxing Day Test on the second day of the fourth Test on Saturday.

Ashes | Ashes 2025 | Ashes 2025/26 | Melbourne Test | Boxing Day Test | AUS v ENG | Jacob Bethell | Ben Duckett | Ben Stokes | Josh Tongue |