ஜெமிமா ரோட்ரிக்ஸ் (கோப்புப்படம்) 
விளையாட்டு

ஸ்மிருதி மந்தனாவுக்காக ஜெமிமா ரோட்ரிக்ஸ் எடுத்த முக்கிய முடிவு! | Jemimah Rodrigues | Smriti Mandhana |

மகளிர் பிக் பாஷ் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது.

கிழக்கு நியூஸ்

இந்திய பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மகளிர் பிக் பாஷ் போட்டியில் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிக் பாஷ் போட்டியில் பங்கேற்றார். பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள அவர் நவம்பர் 9, நவம்பர் 12, நவம்பர் 15 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஆட்டங்களில் விளையாடி முறையே 6, 11, 20 ஆகிய ரன்களை எடுத்தார்.

நவம்பர் 15 ஆட்டத்துக்குப் பிறகு ஏற்கெனவே பேசியபடி அவர் இந்தியா திரும்பினார். இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிகழ்ச்சியில் ஜெமிமா கலந்துகொண்டார்.

பிறகு, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் போக திருமணமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என ஜெமிமா இந்தியாவிலிருக்க விரும்பியதாகத் தெரிகிறது. எனவே, பிக் பாஷ் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து ஜெமிமா விலகியுள்ளார்.

பிரிஸ்பேன் ஹீட் அணியின் தலைமைச் செயல் அலுவலர் டெர்ரி ஸ்வென்சன் கூறியதாவது:

"ஜெமிமாவுக்கு இது சவாலான நேரம். மகளிர் பிக் பாஷ் போட்டியில் மீதமுள்ள ஆட்டங்களில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது துரதிருஷ்டவசமானது. இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவருக்கும் ஸ்மிருதி மந்தனாவின் குடும்பத்துக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப முடியவில்லை என்ற ஏமாற்றத்தை ஜெமிமா பகிர்ந்துகொண்டார்" என்றார் டெர்ரி ஸ்வென்சன்.

பிரிஸ்பேன் ஹீட் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது.

Smriti Mandhana | Jemimah Rodrigues | WBBL | Women's Big Bash | Brisbane Heat |