விளையாட்டு

பாகிஸ்தான் பயிற்சியாளர் கில்லஸ்பி ராஜினாமா!

கடந்த 4 வருடங்களில் 6 பயிற்சியாளர்கள்.

கிழக்கு நியூஸ்

கடந்த 4 வருடங்களில் 6 பயிற்சியாளர்கள். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நீடிக்கும் பயிற்சியாளர் குழப்பம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் அணி இம்மாதம் தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் அணியின் உயர்திறன் பயிற்சியாளராக இருந்த டிம் நீல்சனின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி நீட்டிக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கில்லிஸ்பியிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த கில்லஸ்பி, தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அக்யுப் ஜாவத் பாகிஸ்தான் அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபரில் பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் கேரி கிர்ஸ்டன். தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கான தேர்வுக்குழுவில் இருந்து கில்லஸ்பி நீக்கப்பட்டார். அப்போதிருந்தே பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புதுப்புது சர்ச்சைகள் உருவாகின. அது தற்போது கில்லஸ்பி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் வரைக்கும் சென்றுள்ளது.