படம்: https://x.com/ProteasMenCSA
விளையாட்டு

டெஸ்டில் 42 ரன்களுக்குச் சுருண்ட இலங்கை

யான்சென் 6.5 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கிழக்கு நியூஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இலங்கை 42 ரன்களுக்குச் சுருண்டது.

தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாளில் மழை ஆதிக்கம் செலுத்தியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் டெம்பா பவுமா 11 ரன்களுடனும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பவுமா மட்டும் தாக்குப்பிடித்து 70 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. டிமுத் கருணாரத்னே விக்கெட்டை வீழ்த்தி கதவைத் திறந்துவிட்டார் ககிசோ ரபாடா.

மறுமுனையில் மார்கோ யான்சென் வேகத்தில் மிரட்டி இலங்கை பேட்டர்களை பெவிலியனுக்கு அனுப்பத் தொடங்கினார். 19 ரன்களுக்குள் கருணாரத்னே, நிசங்கா, சண்டிமல், மேத்யூஸ் என முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தார்கள்.

பின்வரிசையில் கமிந்து மெண்டிஸ், கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா என யாரும் ஒத்துழைப்பு தரவில்லை. யான்சென் பந்துவீச்சுக்கு அடுத்தடுத்து பலியானார்கள். ரபாடாவை நிறுத்தி கோட்ஸியா கொண்டு வரப்பட்டார். இவரும் தன் பங்குக்கு கமிந்து மெண்டிஸையும் குசால் மெண்டிஸையும் வீழ்த்தினார்.

50 ரன்களைக்கூட தொட முடியாத சூழலில் யான்சென் தொடர்ச்சியாக 7-வது ஓவரை வீசினார். விஷ்வா ஃபெர்னான்டோ மற்றும் அசிதா ஃபெர்னான்டோ விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இலங்கை அணி வெறும் 42 ரன்களுக்குச் சுருண்டது. யான்சென் 7 விக்கெட்டுகளையும், கோட்ஸியா 2 விக்கெட்டுகளையும், ரபாடா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

டெஸ்டில் இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோர் இது. 1994-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டியில் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே இலங்கையின் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோராக இருந்தது.