மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் தில்லியில் இன்று தொடங்கியது. டெஸ்ட் கேப்டனாக முதல்முறையாக டாஸ் வென்ற ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம் என முன்பே கணிக்கப்பட்டது. இதற்கேற்ப இந்திய தொடக்க பேட்டர்கள் யஷஸ்வி ஜெயிஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக பேட் செய்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தபோது, 38 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல், ஜோமெல் வாரிகன் பந்தில் ஸ்டம்பிங் முறையில் வெளியேறினார்.
முதல் பந்திலிருந்து மிகவும் சௌகரியமாக பேட் செய்யத் தொடங்கினார் தமிழக வீரர் சாய் சுதர்சன். உணவு இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை விளாசி அரை சதத்தைக் கடந்தார் ஜெயிஸ்வால். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் சீரான கூட்டணியைக் கட்டமைக்க, தேநீர் இடைவேளை வரை இருவரும் விக்கெட்டை இழக்கவில்லை. சாய் சுதர்சன் 87 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஜெயிஸ்வால் டெஸ்டில் தனது 7-வது சதத்தை அடித்தார். தேநீர் இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 220 ரன்கள் எடுத்திருந்தது.
58 ரன்கள் எடுத்திருந்தபோது சாய் சுதர்சனின் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டது மேற்கிந்தியத் தீவுகள். இதைப் பயன்படுத்திக்கொண்டு அவர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேட்சை தவறவிட்ட வாரிக்கன், 87 ரன்கள் எடுத்து விளையாடி வந்த சாய் சுதர்சனை வீழ்த்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜெயிஸ்வால் - சாய் சுதர்சன் இணை 193 ரன்கள் எடுத்தது.
அடுத்து வந்த கேப்டன் ஷுப்மன் கில் நிதானமாக விளையாட, ஜெயிஸ்வால் சற்று வேகமாக விளையாடினார். இந்த இணை முதல் நாள் ஆட்டம் முடியும் வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. முதல் நாள் ஆட்டம் முடிய சற்று நேரம் எடுத்தாலும், முதல் நாளில் வீச வேண்டிய 90 ஓவர்கள் முழுமையாக வீசப்பட்டன.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 318 ரன்கள் எடுத்துள்ளது. ஜெயிஸ்வால் 173 ரன்களுடனும் கில் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணியின் இரு விக்கெட்டுகளையும் ஜோமெல் வாரிகன் தான் வீழ்த்தினார்.
23 வயதில் அதிக முறை டெஸ்டில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஜெயிஸ்வால் உள்ளார். டான் பிராட்மேன் தனது 23 வயதில் 8 முறை 150 ரன்களுக்கு குவித்துள்ளார். ஜாவெத் மியான்டட், கிரேம் ஸ்மித், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தங்களுடைய 23 வயதில் தலா 4 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்திருந்தார்கள்.
Ind v WI | Yashasvi Jaiswal | Sai Sudharsan | Jomel Warrican | Shubman Gill | Delhi Test | KL Rahul | Roston Chase | India v Windies | India v West Indies |