விளையாட்டு

உலகக் கோப்பை, ரோஹித் சர்மா: ராகுல் டிராவிட் உருக்கம்

கிழக்கு நியூஸ்

டி20 உலகக் கோப்பை வென்றது குறித்தும், சர்வதேச டி20 போட்டியிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது குறித்தும் ராகுல் டிராவிட் உருக்கமாகப் பேசியுள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி இறுதிச் சுற்று ஆட்ட நாயகனாகவும் பும்ரா தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு இதுவே கடைசி ஆட்டம். ஆட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் டிராவிட் கூறியதாவது:

"ஒரு வீரராக உலகக் கோப்பையை வெல்வதற்கான அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. நான் விளையாடியபோதெல்லாம் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து முயற்சித்திருக்கிறேன்.

ஆனால், இந்த அணிக்குப் பயிற்சியளிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்கள் மூலம் நான் உலகக் கோப்பையை வெல்வது சாத்தியமாகியிருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு உணர்வு. ஆனால், நான் ஏதோ மீட்சியைச் செய்ததாக நினைக்கவில்லை. என்னுடைய பணியை நான் செய்தேன். ரோஹித் சர்மாவுடனும், இந்த அணியுடனும் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவொரு சிறந்த பயணம், இதை நான் ரசித்து அனுபவித்தேன்.

ரோஹித் சர்மாவை ஒரு மனிதராக நிச்சயம் 'மிஸ்' செய்வேன். இவருடையக் குணாதிசயம்தான் என்னை மிகவும் கவர்ந்தது.

என்னிடம் காட்டிய மதிப்பும், அணிக்காக இவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், அக்கறையும் என்னைக் கவர்ந்துள்ளது. இவர் யாரையும் கைவிடவில்லை. என்னைப் பொறுத்தவரை, ஒரு மனிதராக ரோஹித் சர்மாவை நிச்சயமாக 'மிஸ்' செய்வேன்" என்றார் ராகுல் டிராவிட்.