ANI
விளையாட்டு

இலவச டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்: சன்ரைசர்ஸ் புகார்!

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் கூறுகையில், "20 டிக்கெட்டுகள் தொர்பாக பிரச்னை நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதில் தீர்வு காண்போம்" என்றார்.

கிழக்கு நியூஸ்

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இலவச டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டுவதாக சன்ரைசர்ஸ் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

ஹைதராபாதிலுள்ள மைதானம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் காலத்தில் இந்த மைதானம் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். இந்நிலையில், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் இலவச டிக்கெட்டுகள் கேட்டு மிரட்டுவதாக சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் புகார் எழுப்பியுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியின் மேலாளர் ஸ்ரீநாத் டிபி ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர் சிஜே ஸ்ரீநிவாஸுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகத் தெரிகிறது. மின்னஞ்சலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஆங்கில் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி அந்த "பல ஆண்டுகளாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு ஒதுக்கப்படும் 3,900 டிக்கெட்டுகளுடன் எஃப்12ஓ பாக்ஸில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு 50 டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுகின்றன.

ஆனால், நிகழாண்டில் சம்பந்தப்பட்ட அந்த பாக்ஸின் எண்ணிக்கை வெறும் 30 தான் என்றும் வேறொரு பாக்ஸில் கூடுதலாக 20 டிக்கெட்டுகள் இலவசமாகக் கொடுக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. இது எங்களுடையக் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, இதுகுறித்து ஆலோசனை நடத்தி சமரசத் தீர்வை எட்டலாம் என்று கூறினோம்.

மைதானத்துக்கு நாங்கள் உரிய கட்டணத்தைச் செலுத்துகிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஐபிஎல் போட்டியின்போது மைதானம் எங்களுடையக் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் கடந்த ஆட்டத்தின்போது, கூடுதலாக 20 டிக்கெட்டுகளை கொடுக்கும் வரை எஃப் 3 பாக்ஸை திறக்க மாட்டோம் என மறுத்துள்ளீர்கள். இது தொழில்முறைக்கு விரோதமான செயல்.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் மிரட்டல்கள் மற்றும் செயல்பாடுகள், தங்களுடைய மைதானத்தில் சன்ரைசர்ஸ் விளையாடுவதில் தங்கள் தரப்புக்கு விருப்பமில்லை என்பது வெளிப்படையாகிறது. இது உண்மையெனில், நாங்கள் வேறு மைதானத்துக்குச் செல்ல வேண்டும் என்ற தங்களுடைய விருப்பத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரியபடுத்துங்கள். பிசிசிஐ, தெலங்கானா அரசு மற்றும் எங்களுடைய அணி நிர்வாகத்திடம் சொல்லி நாங்கள் வேறு மைதானத்துக்கு மாறிக் கொள்கிறோம்.

ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடத்திலிருந்து இதுபோன்ற மிரட்டல்கள் வருவது இது முதல்முறையல்ல. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் இதற்கு முன்பு நிறைய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளார். அதைச் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஏற்கெனவே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, எல்லா ஸ்டாண்ட்களிலும் தலா 10% இலவச டிக்கெட்டுகளை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு நாங்கள் ஒதுக்குவோம்" என்று மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெகன் மோகன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசுகையில், "ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே 20 டிக்கெட்டுகள் தொர்பாக பிரச்னை நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதில் தீர்வு காண்போம்" என்றார் அவர்.