பும்ராவை அவமரியாதையாகப் பேசியதற்கு மன்னிப்பு கோருவதாகப் பிரபல வர்ணனையாளர் இஷா குஹா தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷா குஹா, இங்கிலாந்து அணிக்காக 8 டெஸ்டுகள், 83 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணையாளராக உள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்டுக்கான வர்ணனையில் பேசியபோது, இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை எம்விபி அதாவது மோஸ்ட் வேல்யபிள் பிரைமேட் என்று குறிப்பிட்டார் இஷா குஹா. பிரேமைட் என்றால் வாலில்லாக் குரங்கு என்கிற அர்த்தம் உள்ளதால் இஷா குஹாவின் இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இதையடுத்து இன்று நேரலை நிகழ்ச்சியில் தனது வருத்தத்தை தெரிவித்தார் இஷா குஹா. பும்ராவை பாராட்டும்போது ஒரு தவறான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன். இதற்காக மனதார மன்னிப்பு கோருகிறேன் என்றார்.
நேரலை நிகழ்ச்சியில் மன்னிப்பு கோரிய இஷா குஹாவுக்கு பிரபல வர்ணனையாளர் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். நாம் எல்லோரும் மனிதர்கள். தவறுகள் செய்வது இயல்பு. இதற்காக நேரலை நிகழ்ச்சியில் மன்னிப்புக் கோரியது துணிச்சலான செயல் என்றார்.