படம்: https://www.instagram.com/isaguha/?hl=en
விளையாட்டு

பும்ரா குறித்த கருத்து: இஷா குஹா மன்னிப்பு

"பும்ராவைப் பாராட்டும்போது ஒரு தவறான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன்."

கிழக்கு நியூஸ்

பும்ராவை அவமரியாதையாகப் பேசியதற்கு மன்னிப்புக் கோருவதாகப் பிரபல வர்ணனையாளர் இஷா குஹா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் காபாவில் நடைபெற்று வருகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை இஷா குஹா இந்தத் தொடரில் வர்ணனை செய்து வருகிறார்.

பிரிஸ்பேன் டெஸ்டுக்கான வர்ணனையில் பேசியபோது, இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை, எம்விபி அதாவது மோஸ்ட் வேல்யுவபிள் பிரைமேட் (Most Valuable Primate) என்று குறிப்பிட்டார் இஷா குஹா. பிரைமேட் என்றால் வாலில்லாக் குரங்கு என்கிற அர்த்தம் உள்ளதால் இஷா குஹாவின் இந்தக் கருத்துக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இதைத் தொடர்ந்து, மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்குவதற்கு முன்பு ஃபாக்ஸ் கிரிக்கெட் நேரலையில் இஷா குஹா வருத்தம் தெரிவித்தார். "பும்ராவைப் பாராட்டும்போது ஒரு தவறான வார்த்தையைப் பயன்படுத்திவிட்டேன். இதற்காக மனதார மன்னிப்பு கோருகிறேன்" என்றார் அவர்.

நேரலை நிகழ்ச்சியில் மன்னிப்பு கோரிய இஷா குஹாவுக்கு பிரபல வர்ணனையாளர் ரவி ஷாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். "நாம் எல்லோரும் மனிதர்கள். தவறுகள் செய்வது இயல்பு. இதற்காக நேரலை நிகழ்ச்சியில் மன்னிப்புக் கோரியது துணிச்சலான செயல்" என்றார் அவர்.

இஷா குஹா இங்கிலாந்து அணிக்காக 8 டெஸ்டுகள், 83 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.