ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ரூ. 25.2 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் ஏலம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்த வீரர் கேமரூன் கிரீன். காரணம், இவர் ஆல்-ரவுண்டர். குறிப்பாக, அதிக தொகை வைத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ஆல்-ரவுண்டரின் தேவை உள்ளது. ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு பெற்றுவிட்டார். இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்ததைப்போலவே கேமரூன் கிரீனுக்கு ஏலத்தில் அதிக போட்டி இருந்தது. கேமரூன் கிரீனின் அடிப்படை விலை ரூ. 2 கோடி. மும்பை இந்தியன்ஸ் ரூ. 2 கோடிக்குக் கேட்டு ஏலத்தைத் தொடக்கி வைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் இணைந்தது.
ரூ. 2.8 கோடியிலிருந்து கேமரூன் கிரீனுக்கான போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே மாறியது. விரைவாக ரூ. 8 கோடிக்குச் சென்றது.
ரூ. 13.6 கோடி வரை ராஜஸ்தான் சென்றது. ரூ. 13.8 கோடியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் இணைந்தது. எல்லோரும் கணித்ததைப்போல கேமரூன் கிரீனைத் தேர்வு செய்ய சிஎஸ்கே, கேகேஆர் இடையே போட்டி நிலவியது. ரூ. 18 கோடியைத் தாண்டி ரூ. 20 கோடியை எட்டியது கிரீனுக்கான ஏலம்.
வழக்கமாக, பிரபல வீரர்களுக்கு குறிப்பிட்ட அளவைத் தாண்டி பெரிய தொகைக்குச் செல்லாது சிஎஸ்கே. ஆனால், கேமரூன் கிரீனுக்கு ரூ. 25 கோடி வரை சிஎஸ்கே சென்றது.
ரூ. 25.2 கோடி வரை கேகேஆர் சென்றது. இதன்பிறகு, கிரீனைத் தேர்வு செய்வதற்கானப் போட்டியிலிருந்து சிஎஸ்கே விலகியது. சிஎஸ்கே விலகிய பிறகு, வேறு எந்த அணியாலும் போட்டியிட முடியாது. காரணம், மற்ற அணிகளிடம் இந்தளவுக்குத் தொகை கிடையாது. கேகேஆர், சிஎஸ்கேவுக்கு அடுத்தபடியாக அதிக தொகை வைத்திருந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான். அந்த அணியிடமிருந்த மொத்த தொகையே ரூ. 25.5 கோடி.
எனவே, சிஎஸ்கே போட்டியிலிருந்து விலகிய பிறகு, கேமரூன் கிரீனைத் தேர்வு செய்தது கேகேஆர். ரூ. 25.2 கோடிக்குத் தேர்வானதன் மூலம், ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்குத் தேர்வான வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கேமரூன் கிரீன் படைத்துள்ளார்.
கேமரூன் கிரீனுக்குச் செல்வது ரூ. 18 கோடி மட்டுமே: ஏன்?
கேமரூன் கிரீன் ரூ. 25.2 கோடிக்குத் தேர்வாகியிருந்தாலும் அவருக்கு ரூ. 18 கோடி மட்டுமே கிடைக்கும். காரணம், இந்திய வீரர்களின் மதிப்பைப் பாதுகாக்கவும் வெளிநாட்டு வீரர்கள் மின் ஏலத்தைக் குறிவைத்து பெரிய தொகைக்குத் தேர்வாவதைத் தடுக்கவும் ஐபிஎல் நிர்வாகத்தால் புதிய முடிவு எடுக்கப்பட்டது. ஐபிஎல் மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச தொகை ரூ. 18 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. ரூ. 18 கோடிக்கு மேல் எந்தவொரு வெளிநாட்டு வீரர் தேர்வு செய்யப்பட்டாலும், ரூ. 18 கோடி மட்டுமே அவ்வீரர் வசம் செல்லும். மீதமுள்ள தொகை வீரர்கள் நலனுக்குச் செலவழிக்கும் வகையில் ஐபிஎல் நிர்வாகம் வசம் செல்லும். இதன்படி ரூ. 25.2 கோடிக்கு தேர்வாகியிருந்தாலும், கேமரூன் கிரீன் வசம் ரூ. 18 கோடி மட்டுமே செல்லவிருக்கிறது.
IPL Auction: Cameron Green sold to KKR for Rs. 25.20 Crores
IPL 2026 | IPL Auction | Cameron Green | CSK | KKR | Chennai Super Kings | Kolkata Knight Riders |