கே.எல். ராகுல் ANI
விளையாட்டு

ஆர்சிபியில் கே.எல். ராகுல், சிஎஸ்கேவில் ரிஷப் பந்த்?: தகவல்

யோகேஷ் குமார்

ஐபிஎல் 2025-ல் ஆர்சிபியில் கே.எல். ராகுல் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஏலம் நடைபெறும் நாள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் 2025-ல் ஆர்சிபியில் கே.எல். ராகுல் விளையாடுவார் என்றும், சிஎஸ்கேவில் ரிஷப் பந்த் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்தப்பின், லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல். ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தியது போல் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அவர் பேசுவதை கேட்டு ராகுல் மிகவும் அமைதியாக எதிரில் நின்று கொண்டிருந்தார். இதை பார்க்க மிகவும் கவலையாக உள்ளது என பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து அடுத்த நாளே சஞ்சீவ் கோயங்கா, ராகுலை தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார். அச்சமயத்தில் கே.எல். ராகுல் லக்னௌ அணியை விட்டு வெளியேறுவார் என்று செய்திகள் வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் ஆர்சிபி அணியில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே 2013, 2016 ஆகிய ஆண்டுகளில் ராகுல் ஆர்சிபி அணியில் விளையாடினார்.

அதேபோல சிஎஸ்கே அணியில் தில்லி கேப்டன் ரிஷப் பந்த் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் அணியின் வருங்கால கீப்பராக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தில்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டிருந்தார்.