விளையாட்டு

287 ரன்கள்: சொந்த சாதனையை முறியடித்த ஹைதராபாத்!

கிழக்கு நியூஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்துள்ளது.

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த டு பிளெஸ்ஸி, வில் ஜேக்ஸை கொண்டு இன்னிங்ஸை தொடங்கினார். அபிஷேக்கும், டிராவிஸ் ஹெட்டும் ஜேக்ஸ் ஓவரில் சற்று பொறுமையுடனே விளையாடினர். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவரில் அடித்தால் சிக்ஸர், பவுண்டரி என விளையாடினார்கள்.

பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் சேர்த்தது. ஹெட் 20 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

டிராவிஸ் ஹெட் தொடர்ந்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடிக்க 8-வது ஓவரிலேயே அந்த அணி 100 ரன்களை தொட்டது.

22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா டாப்லி பந்தில் ஆட்டமிழந்தார். நல்ல அடித்தளம் இருந்ததால், கிளாஸெனை முன்கூட்டியே களமிறக்கிவிட்டார்கள்.

என்ன நடந்தாலும் சிக்ஸர், பவுண்டரிதான் என விளையாடிய ஹெட் 39 பந்துகளில் சதமடித்தார்.

12 ஓவர்களில் 158 ரன்கள் விளாசியதால், 277 ரன்கள் சாதனைக்கு அச்சுறுத்தல் உருவானது.

சதமடித்த ஹெட் 41 பந்துகளில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் 8 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் விளாசினார்.

277 ரன்கள் விளாசியவர்களுக்கு விக்கெட்டை பாதுகாக்க வேண்டும் என்கிற தடுப்பாட்ட உணர்வை எதிர்பார்ப்பது தவறுதான். கிளாஸென் அதிரடியில் இணைந்தார். 15-வது ஓவரில் ஹைதராபாத் 200 ரன்களைக் கடந்தது. கிளாஸென் 23-வது பந்தில் அரை சதத்தை எட்டினார்.

கிளாஸென் 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து 17-வது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். அப்போது 231 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்ததால், 277 ரன்கள் சாதனையை முறியடிப்பது கேள்விக்குறியானது.

அப்துல் சமத் 19-வது ஓவரில் இரு சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகள் விளாசினார். கடைசி ஓவரில் மார்க்ரம் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடிக்க அப்துல் சமத் ஒரு சிக்ஸர் அடித்தார்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களும், சமத் 10 பந்துகளில் 37 ரன்களும் விளாசினார்கள்.

கடந்த மார்ச் 27-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 277 ரன்கள் குவித்து சாதனை படைத்த ஹைதராபாத், அதே சாதனையை இன்று முறியடித்தது.