பி.டி. உஷா 
விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 24 கோடி இழப்பு?: பி.டி. உஷா விளக்கம்

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

யோகேஷ் குமார்

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டதற்கு, பி.டி. உஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் (ஆர்ஐஎல்) உடனான தவறான விளம்பர ஒப்பந்தத்தால், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 1, 2022 அன்று குறிப்பிடப்பட்ட விளம்பரதாரர் ஒப்பந்தத்தின்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2022, 2026), காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (2022, 2026), 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மற்றும் 2028 ஒலிம்பிக்ஸின் அதிகாரபூர்வ விளம்பரதாரராக இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 5, 2023 அன்று திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், குளிர்கால ஒலிம்பிக்ஸ் (2026, 2030) மற்றும் யூத் ஒலிம்பிக்ஸ் (2026, 2030) ஆகிய போட்டிகளுக்கான கூடுதல் உரிமைகளும் வழங்கப்பட்டதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் உடனான தவறான விளம்பர ஒப்பந்தத்தால், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா, “தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு நிதி இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.